சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை காவல்துறை விசாரணைக்காக அழைத்து மாதவரம் அருகே அழைத்து செல்லப்பட்ட போது, கடந்த ஜூலை 14 ம் தேதி போலிசாரை தாங்கி துப்பாக்கியை பிடுங்கி காவல்துறையினரை சுட முயற்சித்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பகுதியில் மாதவரம் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் திருவேங்கடம் என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்கவுண்டர் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரியும் சிறைக் கைதிகள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்..
இந்த வழக்கு நீதிபதிகள், எஸ் எஸ் சுந்தர், எம்.சுதீர் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜராகி, என்கவுண்டர் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணை அறிக்கை இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை, விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை முடிவடையாத நிலையில் இந்த வழக்கின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் யாரும் இந்த வழக்கினை தொடராத பட்சத்தில் முன்றாம் நபரான வழக்கறிஞர் மூலமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பினார்
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், திருவேங்கடம் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.