திருச்சி: திருச்சியில் ஏலியன் டாட்டூ என்ற கடையில் நாக்கை பிளந்து அறுவைச் சிகிச்சை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிகள், மயக்க மருந்துகள் ஹரிஹரனுக்கு எப்படி கிடைத்தது என சிறையிலேயே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே "ஏலியன் டாட்டூ" என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார். உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்தள்ளார்.
மேலும், டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை அவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார்.
மேலும், அவர் தன்னுடைய நாக்கை பிளவுப்படுத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுடைய நாக்கை பிளவுபடுத்தி கொண்டனர். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர போலீசார், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது அவர் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில் ஹரிஹரனையும், அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் "சீல்" வைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இதற்கு முன்பாக மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும், அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தரங்க உறுப்புகளிலும் ஹரிஹரன் சிலருக்கு டாட்டு போட்டு மாதம் 3 லட்சம் வரை சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. முதலில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக தனது நண்பர்களையே விளம்பர மாடல்கள் போல் அமர வைத்து அவர்களது கண்களில் கலரிங் செய்வது, நாக்கை பிளவு படுத்தி டாட்டூ போடுவது என கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிஹரனிடம் அங்கேயே வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாக்கு, கண் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க பொது மருத்துவர்களாலேயே முடியாத போது அதற்கென தனியாக மேற்படிப்பு படிக்க வேண்டும். ஆனால் எந்தவித தகுதியும் இல்லாத ஹரிஹரன் நாக்கிலும் கண்களிலும் டாட்டு போடுவது என விபரீத செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது கடையில் சோதனை செய்த அறுவை சிகிச்சை கருவிகளும் மயக்க மருந்தும் இருந்துள்ளது.
இதை அடுத்து சாதாரண நபருக்கு மருத்துவக் கருவிகள் மயக்க மருந்துகள் கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் போட்டு ஹரிஹரன் மருந்துகளை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான மருத்துவ சான்றிதழ் உள்ள மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை கருவிகளையும் மயக்க மருந்துகளையும் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அடுத்து சட்ட விரோதமாக ஹரிஹரன் இது போன்ற உபகரணங்களையும் மயக்க மருந்துகளையும் பெற்றது எப்படி? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் கீழ் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.