பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், தேர்தலில் ஆளும் பாஜகவை ஒன்றிணைந்து நின்று வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டம் வகுத்து வருகின்றன. இதற்காக 15 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பீகார் மாநிலம் பாட்னாவில் முகாமிட்டு ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, "நாட்டில் பாஜக வெறுப்புணர்வு, வன்முறையை பரப்பி தேசத்தை பிளவுபடுத்த செயல்பட்டு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளான நாங்கள் அன்பை பரப்பி அனைவரையும் ஒன்றிணைக்க முயல்கிறோம். அதற்காகத் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்போம். நாட்டில் தத்துவ ரீதியான மோதல் நடைபெற்று வருகிறது. ஒன்று காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமை சிந்தனை, மற்றொன்று ஆர்எஸ்எஸ்-இன் தேச பிரிவினை சிந்தனை. பாரத் ஜோடோ யாத்திரைக்கு பீகார் மக்கள் பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ பீகாரில் உள்ளது. எங்கள் சிந்தனையில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதால்தான் பீகார் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டார்கள். கர்நாடகாவில் நடைபெற்றது என்னவென்று உங்களுக்கு தெரியும். பாஜக தலைவர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று நீண்ட உரையாற்றி நாங்கள் வெற்றி பெறுவோம் என கூக்குரலிட்டனர். ஆனால் முடிவு என்ன ஆனது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த மேடையில் இருந்து கூறுகிறேன், நீங்கள் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் இனி பாஜகவை பார்க்க முடியாது. ஏன்னென்றால் காங்கிரஸ் ஏழைகளின் பக்கம் நிற்கிறது. பாஜக இரண்டு மூன்று பேர்களின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது என நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும்." இவ்வாறு அவர் பேசினார்.