சென்னை: சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் புகை ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பயணிகளை கீழே இறக்கிவிட்டு, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிப் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், கச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் , கட்வால் ரயில் நிலையத்தில் நின்றபோது, திடீரென புகை கிளம்பியது. எக்ஸ்பிரஸ் ரயிலின் பி4 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு எழுந்தனர்.
அதிகாரிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு, புகை வந்த பெட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கட்வால் ஸ்டேஷனில் உள்ள பிளாட்பாரத்தில் அடர்ந்த புகை சூழ்ந்ததால், மற்ற பயணிகள் அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றனர்.
ரயில் பெட்டியில் புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சம்பவத்தால், கட்வால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.