பெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்ட முதல்வர் ஸ்டாலின்! ரூ.944.80 கோடி வழங்கிய மத்திய அரசு!

post-img

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக தமிழ்நாட்டுக்கு 2000 கோடி நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் ரூ.944.80 கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய குழுவின் ஆய்வுக்குப் பிறகு கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் பெஞ்சல் புயலாக உருமாறியது. அதே நேரத்தில் மிகவும் மெதுவாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது.

சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரி மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. திருவண்ணாமலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக திடீரென ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து அந்த பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 2000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்புக்காக தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள சுமார் 945 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," கடந்த 30ஆம் தேதி பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் வகையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக தமிழக அரசுக்கு 944.80 கோடி ரூபாய் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதலின்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இயற்கை சீற்றங்களால் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக மதிப்பிட மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின் படி பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து கூடுதல் நிதி உதவிகள் வழங்க அனுமதி அளிக்கப்படும். பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு 28 மாநிலங்களுக்கு ஏற்கனவே ரூ.21,718,716கோடிக்கும் மேலாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 14 ஆயிரத்து 878 கோடியும், 18 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4,800 கோடியும், 11 மாநிலங்களில் மாநில பேரிடர் தனிப்பு நிதியிலிருந்து 1385 கோடியும், ஏழு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தனிப்பு நிதியிலிருந்து 646 கோடியும் வழங்கப்பட்டு இருக்கிறது. நிதி உதவி தவிர மத்திய அரசின் சார்பில் வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் படையின் மேலாண்மை குழுக்கள், ராணுவம், விமானப்படை உள்ளிட்ட அனைத்து தளவாட உதவிகளும் வழங்கப்பட்டிருக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

Related Post