சனாதனம் என்பது HIV, தொழுநோய் போல.. மவனே டெல்லிக்கே வர்றேன்..

post-img

சென்னை: சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ஆர்ப்பாட்டம்: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய கட்சித் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இன்று இந்தியா முழுவதும் விவாதப்பொருள் ஆகியுள்ளது. அந்த விவாதப் பொருளுக்கு விடை சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருக்கிறது. ஏனென்றால் சனாதனமும், விஸ்வகர்மா யோஜனாவும் வெவ்வேறு அல்ல.



எச்.ஐ.வி, தொழுநோய்: எனக்கு என்ன விந்தையாக இருக்கிறதென்றால், உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. அருவருப்பாகப் பார்க்கும்படி சனாதனத்தைச் சொல்லவேண்டும் என்றால் ஒருகாலத்தில் தொழுநோய் இருந்தது. பிறகு எச்.ஐ.வி இருந்தது. சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும்.


சனாதன தர்மத்தைக் கடைபிடியுங்கள் என பிரதமர் சொல்கிறார். அவர் கடைபிடித்திருந்தால் இத்தனை வெளிநாடுகளுக்குப் போயிருக்கக் கூடாது. ஒரு நல்ல இந்து கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு ஊர் சுற்றுவதே வேலை. சனாதன தர்மத்தை மீறி ஊர் சுற்றும் ஒரு ஆள், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?


சவால்: நேற்று நான் பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் சவால் விட்டேன். சனாதனம் பற்றி விவாதம் நடத்துங்கள். எங்கள் தலைவரின் அனுமதியோடு சொல்கிறேன். 10 லட்சம் பேரை, 1 கோடி பேரை டெல்லியில் திரட்டுங்கள். உங்கள் அத்தனை சங்கராச்சாரியார்களையும் மேடையில் உட்கார வையுங்கள். உங்கள் எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். வில், அம்பு, கத்தி, கொடுவாள் எல்லாவற்றையும் நிற்க வையுங்கள். நான் வெறும் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களோடு வருகிறேன். என்னை ஜெயித்துப் பார். நீங்கள் எல்லாம் மகா விஷ்வ குரு. உங்கள் பார்வையில் சாதாரண பஞ்சம சூத்திரன்.


உதயநிதி ஸ்டாலின் பேசியது மென்மையான பேச்சு. என்னைக் கேட்டால் இன்னும் கடுமையாகப் பேசுவேன். சனாதனத்திற்கு எதிரான எங்கள் கருத்தை எதிர்த்துப் பேசுவதற்கு உங்கள் தரப்பில் யாராவது ஆள் இருந்தால் டெல்லியில் எங்கு வேண்டுமானாலும் நாள் குறியுங்கள். ஆ.ராசா வருவதற்குத் தயாராக இருக்கிறேன்.


சனாதான இந்து வேறு, சாதாரண இந்து வேறு என்று நான் பேசினேன். ஐயோ, இந்துக்களை பிரித்துவிட்டார் ஆ.ராசா என்று 12 மொழிகளில் மொழிபெயர்த்து பரப்பிவிட்டார்கள். இன்று நாடு முழுவதும் பற்றிவிட்டது. இன்று இங்கே தொடங்கியுள்ள போராட்டம் அடுத்த பத்தாண்டு காலத்தில் முழு சமதர்ம மதச்சார்பற்ற நாடு என்பதை உணர்வோடு உருவாக்கும் காரியத்திற்கான தொடக்கப்புள்ளி இந்தக் கூட்டம்" எனப் பேசினார்.

 

Related Post