பெங்களூர்: கர்நாடக பெண் அமைச்சரை அவதூறாகப் பேசியதாக பாஜக நிர்வாகி சி.டி. ரவியை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாநிலச் சட்டசபை வளாகத்திலேயே வைத்து சி.டி.ரவியை போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அமித் ஷா இழிவுபடுத்தியதாகச் சொல்லி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லியில் இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மறுபுறம் காங்கிரஸ் தான் அம்பேத்கரை இழிவுபடுத்தியதாக பாஜகவினரும் பதிலுக்குப் போராட்டம் நடத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பாஜக எம்பிக்கள் சிலர் காயமும் அடைந்தனர்.
அதேபோல கர்நாடகாவிலும் சட்டசபையில் இது தொடர்பாகப் போராட்டம் நடந்தது. அப்போது கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பாஜக எம்எல்சி சி.டி.ரவி மோசமான வார்த்தைகளால் திட்டியதாக காங்கிரார் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அவர் மீது பிஎன்எஸ் 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
சட்டசபை வளாகத்தில் இருந்த சி.டி. ரவியை அங்கேயே வைத்து போலீசார் கைது செய்தனர்.