வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 3வது ஆண்டு நிறைவடைய உள்ளது. தற்போது இருநாடுகளும் தீவிரமாக மோதி வரும் சூழலில் தான் உக்ரைன் - ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தலில்வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் உக்ரைன் - ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே இருந்த எல்லை பிரச்சனை போராக மாறி உள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் போர் 3வது ஆண்டை நிறைவு செய்யும்.
தற்போது க்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்யா படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது குறைந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலுத்தது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமன ரஷ்யா, உக்ரைன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே தான் அமெரிக்கா அதிபராக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரைன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்தும் திட்டம் தன்னிடம் உள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுபற்றி புளோரிடாவின் மார் ஏ லாகூ கிளப்பில் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இந்த போரை பேச்சுவார்த்தை மூலம் தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'' என்றார். இதன்மூலம் ரஷ்யா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர், ‛‛போர் நிறுத்ததத்திற்காக ரஷ்யாவிடம், உக்ரைன் தனது சொந்த நிலத்தை விட்டு கொடுக்க வேண்டுமா?'' என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு டொனால்ட் டிரம்ப் அளித்த பதிலில், ‛‛போர் நிறுத்தம் செய்வதற்கான திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை இப்போது கூற முடியாது. போர் நிறுத்த திட்டத்தை முன்கூட்டியே தெரிவிப்பது என்பது அதன் செயல்திறனை குறைத்துவிடும்'' என்று கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு என்பது ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்று செயல்பட உள்ளார். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் இருநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் தலைமை அதிகாரி அன்டி எர்மாக் கூறுகையில், ‛‛ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் இன்னும் தயாராகவில்லை. இருப்பினும் கூட டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் டிரம்புடன் நாங்கள் சேர்ந்து செயல்படுவோம்'' என்று கூறியுள்ளார். இதனால் விரைவில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.