அரசு பேருந்துகள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மஞ்சள் நிறத்தில் புதிய பேருந்துகள் ஜொலித்து நிற்கின்றன. இந்த பேருந்துகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்று மக்கள் எதிர்பார்த்திருக்கையில், ஆகஸ்ட் 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு போக்குவரத்து என்பது மிக மிக முக்கியமானது என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் கடும் போக்குவரத்து நெரிசலை நாம் பார்த்திருப்போம். அமெரிக்கா ஏன்? நம்ம நாட்டில் பெங்களூரிலேயே அதிக டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. ஆனால் சென்னையில் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டாலும் அது சில நிமிடங்களில் சரியாகிவிடும். காரணம் நம்மிடம் இருக்கும் பொது போக்குவரத்தின் பலம்தான்.
எங்கு அரசு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் ஓடுகிறதோ அங்கு டிராபிக் ஜாம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே புதிய பாலங்கள், அடிக்கடி சாலை விரிவாக்க பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இது அரசுக்கு லாபமான விஷயம்தானே. இதைதான் தற்போது தமிழக அரசு புரிந்துக்கொண்டு அரசு பேருந்து போக்குவரத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக 1,000 புதிய பேருந்துகளை அரசு வாங்கியது.
இது தவிர 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் பழைய பேருந்துகள் புதுப்பொலிவு பெற இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும், புறநகர் பேருந்துகள் சிறப்பு நிறத்திலும், பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகள் பிங்க் நிறத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ரூ.500 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட 500 பழைய பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் நிற பேருந்தில் வெறும் பெயின்ட் மட்டும் மாற்றப்படவில்லை. மாறாக மொத்த உள்கட்டமைப்பே மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது பொதுவாக அரசு பேருந்துகளில் 54 சீட்கள் இருக்கும். ஆனால் இந்த பேருந்தில் 50 சீட்கள் மட்டுமே இருக்கும். எனவே பயணிகள் கொஞ்சம் தாராளமாக உட்கார்ந்து பயணிக்கலாம். அதேபோல ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.14 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி சிறப்பாக மாற்றி வடிவமைக்கப்பட்ட பேருந்துகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
முதல் கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 பேருந்துகளை வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து 400 பேருந்துகளும், மேற்கொண்டு 400 பேருந்துகள் என மொத்தம் 900 பேருந்துகள் வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த புதிய பேருந்து வரவால் இனியேனும் மக்கள் இடநெருக்கடி இன்றி பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.