மும்பை: சில மோசமான படங்களுக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு தியேட்டர் போய்விட்டால் நமக்கு வேறு ஆப்ஷன் இல்லை.. டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காது என்பதாலேயே வேறு வழியில்லாமல் முழு படம் உட்கார்ந்துவிட்டு வருவோம். ஆனால், இப்போது பிவிஆர் நீங்கள் எவ்வளவு நேரம் படம் பார்க்கிறீர்களோ.. அந்தளவுக்கு மட்டுமே டிக்கெட் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற புதிய முறையை அறிவித்துள்ளது.
முன்பெல்லாம் தியேட்டருக்கு போவதே ஒரு தனி கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், இப்போது ஓடிடி வந்துவிட்டதால் தியேட்டருக்கு போவதே வெகுவாக குறைந்துள்ளது.
இது மட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இதனால் எந்த படத்திற்குப் போகலாம் என்பதிலேயே குழப்பம் இருக்கலாம். சரி, ஏதாவது ஒரு படத்திற்குப் போகலாம் என்று டிக்கெட் புக் செய்து போய் அமர்ந்து படம் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தால் என்ன செய்வது.. இதுவரை இதற்கு எந்தவொரு தீர்வும் இல்லாமல் இருந்தது. டிக்கெட் புக் செய்ததற்காகவே வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை உட்கார வேண்டி இருந்து இருக்கும்.
ஆனால், இனிமேல் அப்படிக் கஷ்டப்பட்டு உட்கார தேவையில்லை.. படம் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பாதியிலேயே எழுந்து வெளியே வந்துவிடலாம்.. மேலும், நீங்கள் எந்தளவுக்குப் படம் பார்க்கிறீர்களோ.. அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் செலுத்தினால் போதுமாம். தற்போது டெல்லி என்சிஆர் பகுதியில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் நாடு முழுக்க அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "இந்த டிக்கெட் புக் செய்வோர் வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விடக் கூடுதலாக 10 சதவீதம் கொடுத்து டிக்கெட்டை புக் செய்ய வேண்டும்.
ஏஐ கேமரா மூலம் தியேட்டரில் இருப்போர் முறையில் கண்காணிக்கப்படுவார்கள். நீங்கள் புக் செய்யப்படும் டிக்கெட் உங்கள் இருக்கையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் யார் உள்ளே இருக்கிறார்கள்.. ஒருவர் எப்போது உள்ளே வருகிறார்.. எப்போது கிளம்புகிறார் என அனைத்தையும் கண்காணிப்போம். நீங்கள் எப்போது வெளியேறுகிறீர்கள் என்பதை வைத்து அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும்" என்றார்.
உதாரணமாக ஒருவர் 50% படத்தை மட்டுமே பார்த்தால் அவருக்கு 50% டிக்கெட் திரும்பத் தரப்படும். அதேநேரம் 25 முதல் 50% படம் மீதம் இருந்தால்.. 30 சதவிகிதம் டிக்கெட் தொகை திரும்பத் தரப்படும். ஒருவேளை 50%க்கு மேலான படம் இருந்தால் 60% அப்படியே திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டயர் 1 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி, பின்னர் அதை படிப்படியாக விரிவுபடுத்த பிவிஆர் ஐநாக்ஸ் முடிவு செய்துள்ளது.
இது படம் பிடிக்கவில்லை என்றால் மட்டுமில்லை.. நீங்கள் தியேட்டருக்கு லேட்டாக போனால் கூட பயன்படும். அதாவது டிராபிக் உள்ளிட்ட ஏதோ சில காரணங்களால் ஆரம்பத்தில் வரும் 30 நிமிடங்களை நீங்கள் மிஸ் செய்துவிட்டீர்கள் என்றால்.. அதற்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. மேலும், குறிப்பிட்ட 30 நிமிடம் நேரம் மட்டுமே தியேட்டரில் பார்க்க வேண்டும் என நினைத்தால் அதை மட்டும் பார்த்துவிட்டு அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதாவது எவ்வளவு நேரம் தியேட்டருக்குள் இருக்கிறோமோ.. அதற்கு தகுந்தார் போல டிக்கெட் செலுத்தினால் போதும்!