சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் ஒரு இயக்கமாகச் செயல்படத் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வான அறிவிப்பு கிடைத்திருக்கிறது.
விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த ஆதவ் அர்ஜுனாவைக் கட்சியிலிருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த முடிவைக் கட்சியின் உயர்மட்டக் குழுகூட முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இடைநீக்கம் முடிவு கட்சிக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாகும் என்று விசிக தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆதவ் அர்ஜுனாவின் திமுக எதிர்ப்பு, தலித் முதல்வர் ஆகிய கருத்தை ஆதரித்து கருத்து பதிவுகளை வெளியிடும் விசிகவி தொண்டர்களைப் பார்க்க முடிகிறது.
அதே மாதிரி கட்சிக்குள் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ஆதவ் அர்ஜுனாவின் இடைநீக்கத்தை வரவேற்பதாகவே தெரிகிறது. சொல்லப் போனால், விசிகவுக்குள் ஆதவ் அர்ஜுனாவுக்கு இருந்த ஒரே ஆதரவு திருமா மட்டுமே என்றும் சொல்லப்படுகிறது.
துணைப் பொதுச் செயலாளராக வந்த உடனேயே பதவியை ஆதவ்க்கு திருமா அளித்த போதே கட்சி உயர்மட்டத்தில் உள்ள தலைவர்கள் பழக்கத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்தன. விசிக இரண்டாம் கட்டத் தலைவர்களின் ஆதரவு இல்லாமலே ஆதவ் அரசியல் களத்தில் அடித்து ஆட ஆரம்பித்தார். தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் எனச் சொல்லிக் கொள்ளும் ஆதவ் இந்தச் சர்ச்சைகளை எழுப்புவதன் மூலம் முடிவு எவ்வாறு அமையும் என அறியாதிருக்க வாய்ப்புகள் இல்லை. அவரும் கட்சிக்குள் தனக்கு நிலவும் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டுதான் காய்களை நகர்த்தி இருப்பார்.
ஆகவேதான், இரண்டு மாதம் முன்னதாக ஒரு வாரப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஆதவ், உதயநிதியை டார்கெட் செய்து 'நான்கு வருடத்திற்கு முன்பாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் துணை முதல்வராகும் போது 40 வருடங்களாக அரசியல் களத்தில் உள்ள திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?' என்று கேட்டார். அது விசிக மற்றும் திமுக இடையே இருந்த நட்புறவைக் கெடுத்தது. ஆனால், அதைக் கண்டிக்க வேண்டிய திருமா, 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்பது விசிகவின் நீண்டகால கோரிக்கைதான் என்றும் எனக்கும் முதல்வர் கனவு இருக்கிறது என்றும் பேசி ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக ஆதரித்திருந்தார்.
அந்த நம்பிக்கையில் அம்பேத்கர் நூல்வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் மேடையேறிய ஆதவ், 'தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடக்கிறது. அதை ஒழிக்க வேண்டும்' என்று கொந்தளித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பேச்சு பற்றி எரிந்த நிலையில், இப்போது அவரை விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்துள்ளார் திருமா.
இந்த முடிவை ஆதவ் முன்பே எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். அதனால்தான் அவர் 'வாய்ஸ் ஆஃப் காமன்' அமைப்பை தமிழ்நாடு முழுக்க ஒரு இயக்கமாக மாற்ற இருப்பதாக நூல் வெளியீடு முடிந்த அன்றே யூடியூபில் போட்ட ஒரு காணொளி மூலம் விளக்கி இருந்தார். கூடவே விஜய்யுடன் அவர் மேடையைப் பகிர்ந்து கொண்டதே அவர் தவெகவில் இணைவதற்காக ஒரு முன்னோட்டம்தான் என்கிறார்கள்.
கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கும் 2024 தேர்தலில் விசிகவுக்கும் தேர்தல் வியூகங்களை வகுக்கும் குழுவிலிருந்த ஆதவ், வரும் 2026இல் விஜய்க்கு வேலை செய்வதற்காகத் திட்டங்களை வகுத்துவிட்டார். அதற்காகப் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள். விசிகவை தவெக பக்கம் இழுத்து வந்து அப்படியே அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் வியூகத்தைத் திட்டமிட்டிருந்த அவருக்கு விசிக விஜய் பக்கம் வராது என தெரிந்த பிறகும் அங்கே தொடர வாய்ப்பு இல்லை.
இதே திமுக கூட்டணியில் விசிக இருந்தால், ஆதவ் அர்ஜுனாவுக்கு 2026 தேர்தலில் சீட்டுக் கிடைக்காது. ஆகவே, அவர் விஜய் ஐடி விங்கை பலப்படுத்தி அதன் மூலம் சீட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்றும் ஒரு கணக்கைப் போட்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.
ஆக, அதை எல்லாம் உணர்ந்தே அவர் தவெக பக்கம் தலித் வாக்குகளை இழுக்க தலித் முதல்வர், தலித் மக்கள் உரிமை என்று சொல்கிறார். அதன் மூலம் விசிக தலித் வாக்குகளில் கொஞ்சம் விஜய் பக்கம் செல்ல வியூகம் அமைக்கிறார். அதனால்தான் விசிக மீதும் திருமா மீதும் விமர்சனங்களை முன்வைக்கும் இயக்குநர் ரஞ்சித்தை அவர் பிறந்தநாளில் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார். புரட்சி பாரதம் போன்ற கட்சியை தவெகவுக்குள் நகர்த்தவே இந்த முயற்சி என்றும் சொல்கிறார்கள்.
எனவே வாய்ஸ் ஆப் காமன் தமிழகம் முழுக்க ஒரு இயக்கமாக மாற உள்ளது. கூடவே அது விஜய்யின் தொழில்நுட்ப அணியை எடுத்து நடத்த இருக்கிறது என்கிறார்கள். விரைவில் தவெகவின் பொருளாளராக ஆதவ் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். தவெக பக்கம் ஆதவ் அர்ஜுனா சென்றால், திமுகவுக்கு அது பெரிய தலைவலியாக மாறும் என்கிறார்கள் நமக்குத் தகவல் சொன்னவர்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage