நாடாளுமன்றத்தில் பாஜகவை படாதபாடு படுத்தும் 'பப்பு' ராகுல்ஜி.. ராஜ்நாத்சிங்கை என்ன செய்தார் தெரியுமா?

post-img
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முடக்கி வைத்துள்ளன. அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க கோரி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவது, இரு சபைகளிலும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி. இந்த போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் தமது நடவடிக்கைகள் மூலம் கவனம் ஈர்த்தும் வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரின் ஒவ்வொரு நாளும் சபை கூடுவதும் அமளியால் ஒத்தி வைக்கப்படுவதும் அமளிக்கு இடையே சபை அலுவல்கள் நடைபெறும் இயல்பாகிவிட்டது. அதேபோல நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். அதானி ஊழல் குறித்து கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்; மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய போது, காங்கிரஸ் எம்பிக்கள் இருவர் அதானி- மோடி முகமூடி அணிந்திருந்தனர்; அவர்களிடம் ராகுல் கேள்விகளை எழுப்பும் ஓரங்க நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதேபோல நேற்று மோடி- அதானி உருவங்களுடனான பை ஒன்றை பிரியங்கா காந்தி எம்பி கொண்டு வந்து கவனம் ஈர்த்தார். இப்படி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி ஏதேனும் ஒரு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கவனம் ஈர்த்து வருகிறார். இந்த வகையில் இன்று காலை நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தந்தார். அப்போது ராஜ்நாத்திங்குக்கு தேசியக் கொடியையும் ரோஜாப்பூவையும் கொடுத்து, நாடாளுமன்றத்தை முடக்காமல் விவாதத்துக்கு அனுமதி இரு சபைகளையும் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ராகுல் காந்தியின் இந்த நூதன கோரிக்கையால் நாடாளுமன்ற வளாகம் கலகலப்பாகிப் போனது.

Related Post