பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு 10 ஆயிரம் தருவதாக கடை திறந்த திருப்பத்தூர் வியாபாரி.. இறுதியில் ட்விஸ்ட்

post-img
வேலூர்: யூடியூப்பை பார்த்து பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி வியாபாரி ஒருவர் திருப்பத்தூரில் நடுரோட்டில் கடையை திறந்தார். இதனால் ஏராளமானோர் அங்கு கூடினார்கள்.. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இந்நிலையில் கடையை திறந்த வியாபாரி கடைசியில் கையை விரித்தார். இதனால் அங்கு சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் போலீசார் எச்சரித்ததால் ஒரே நாளில் அந்த கடை அகற்றப்பட்டது திருப்பத்தூர் சிதம்பரனார் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஹசான் என்பவர் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே பழைய நாணயத்தில் உள்ள ஆண்டுகளை வைத்து அதற்கு தகுந்தாற்போல் பணம் வழங்குவதாக கூறி தற்காலிக கடை ஒன்றை சாலையோரத்தில் நேற்று திறந்தார். அவரது கடையில் 1991-ம் ஆண்டு பொறிக்கப்பட்ட 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக விளம்பரமும் செய்து இருந்தார். இதனை அறிந்த நபர் ஒருவர் 1991-ம் ஆண்டு பொறிக்கப்பட்டு உள்ள 1 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்து முகமது ஹசானிடம் கொடுத்து ரூ.10 ஆயிரம் கேட்டிருக்கிறார்.. அந்த நாணயத்தை பார்த்த முகமது ஹசான், நாணயத்தை கொடுத்த நபரிடம் இந்த நாணயத்தில் டைமண்ட் குறியீடு இல்லை. அந்த குறியீடு இருந்தால் மட்டுமே பணம் வழங்கப்படும் என அவர் நாணயத்தை திரும்ப கொடுத்துவிட்டாராம். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நபர், முகமது ஹசானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முகமது ஹசானை திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், யூடியூப் பார்த்து அதிக தொகை கொடுத்து 1 ரூபாய் நாணயங்களை வாங்க முகமது ஹசான் நேற்று கடையை அமைத்தது தெரியவந்தது. அவரிடம் யூடியூப்பில் வருவது எல்லாம் உண்மை இல்லை.. யாராவது வதந்தி கிளப்பி இருக்க்கூடும். இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்று முகமது ஹசானை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். யூடியூப் பார்த்து கடை அமைத்து ஒரே நாளில் அதை அகற்றிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post