நாடாளுமன்ற வளாகத்தில் என்ன நடந்தது? மக்களுக்கு தெரியனும்! சிசிடிவி காட்சியை வெளியிடுங்க! ப சிதம்பரம்

post-img
டெல்லி: நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நேற்று முன் தினம் நடந்த தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பதை உலகிற்கு காட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டியது தானே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவிற்கு எதிராக நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமித்ஷாவுக்கு எதிராக போராடம் நடந்தது. திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் செய்தனர். பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடந்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் இந்த விவகாரம் பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால், தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸை கண்டித்து பாஜக எம்பிக்களும் போராட்டம் செய்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், பாஜக எம்பிக்கள் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் எம்பிக்கள் தள்ளிவிட்டதில், 2 பாஜக எம்பிக்கள் கீழே விழுந்து காயமடைந்ததாக பாஜக எம்பிக்கள் கூறினர். பாஜக எம்பி, சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவரது தலையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் தான் சந்திர சாரங்கி கீழே விழுந்ததாக பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டினர். மேலும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், பாஜக எம்பிக்களை தள்ளிவிடுவதற்காகத் தான் ராகுல் காந்தி கும்ஃபூ படித்தாரா என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்பிக்கள் தள்ளிவிட்டதால் தான் பாஜக எம்பிக்கள் இருவரும் காயமடைந்ததாக டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் என்ன நடந்தது என்பதை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் தெரிந்துவிடப்போகிறது என்றும், ஏன் அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு மறுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ப சிதம்பரம் கூறியதாவது:- ”நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? நுழைவாசலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே? அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது? உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?” என்று பதிவிட்டுள்ளார்.

Related Post