சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளர், சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்ததில், கண்டெய்னர் லாரியின் கீழ் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார், உயிரிழந்த நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் (36) என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மிகவும் நெரிசலான சாலை என்றால் அது ஜிஎஸ்டி சாலை தான். சென்னைக்குள் ஜிஎஸ்டி சாலை ஒரளவு நன்றாகவே இருக்கும். ஆனால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு அருகே பரனூர் வரை இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு ஏற்ற வகையில் இல்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் எனில், சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வரை உள்ள பகுதியில் இரும்புலியூர் பகுதியில் சாலைகளில் பள்ளம் காணப்படுகிறது. இரவில் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிதமான வாகத்தில் சென்றால் தப்பிப்பார்கள் என்றும், அதிவேகத்தில் சென்றால் பள்ளம் இருப்பது தெரியாது என்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள். பகலிலேயேஇந்த சாலையில் பீக அவர்ஸில் சென்றால், பள்ளம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து வந்தார்கள்.
இந்த சூழலில் தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்ற மென்பொறியாளர் , சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்ததில், கண்டெய்னர் லாரியின் கீழ் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் பெருங்களத்தூரில் இருந்து பரனூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்துநெரிசலில் அடிக்கடி சிக்கி தவிக்கும் நிலையில், இந்த சாலையில் நெரிசலுக்கு தீர்வு காண அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெருங்களத்தூரில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் புதிய சாலை பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் இரும்புலியூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலைகளை சீரமைக்கவும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.