மீண்டும் இணையும் தாமரை + இலை.. அமித் ஷா போட்ட உத்தரவு? உருவாகுது அதிமுக - பாஜக கூட்டணி?

post-img
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பின்பும் கூட பெரிதாக செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. ஊடகங்களிலும் கூட இவர் பெரிதாக பேட்டிகளை அளிப்பது இல்லை.. முக்கியமாக பாகாவின் கூட்டணி பற்றி பெரிதாக கருத்துக்களை தெரிவிப்பது இல்லை.. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாவதற்கான சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி பற்றி சில மூத்த தலைவர்கள் அமித் ஷாவிடம் பேசி உள்ளார்களாம். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி ஏன் முக்கியம். திமுகவை எதிர்க்க ஏன் இந்த கூட்டணி அவசியம் என்றும் பேசி உள்ளார்களாம். தமிழ்நாட்டில் நாம் தமிழர், விஜய், அதிமுக, பாஜக என்று திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. அப்படி சிதறினால் திமுகவை வீழ்த்தவே முடியாது. மனஸ்தாபங்களை களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் அமித் ஷாவிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி ஆலோசிக்கலாம் என்று அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளாராம். அதன்படி அதிமுக தலைவர்கள் பற்றி தவறாக பேச வேண்டாம்.. மேடைகளில், செய்தியாளர் சந்திப்புகளில் தவறாக பேச வேண்டாம். அப்படி பேசினால் சிக்கல் ஆளும். 2025ம் ஆண்டே கூட்டணியை இறுதி செய்ய வேண்டும். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கூட்டணி வலிமையாக இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணி உருவாக்கவில்லை. பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை. இப்படி இருந்தால் வலிமையான திமுகவை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று அமித் ஷாவே கேட்டதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு ரெடி: இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பின் முக்கியமான சில திட்டமிடல் இருப்பதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி எடப்பாடி பழனிசாமி பெரும்பாலும் மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக, பாமக , தேமுதிக, புதிய தமிழகம் உடன் மீண்டும் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது என்டிஏ கூட்டணி மீண்டும் உருவாக்கப்படலாம். ஆனால் இதற்கு அண்ணாமலை முட்டுக்கட்டை போட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அண்ணாமலை திரும்பி வந்த பின் பெரியதாக கருத்துக்கள் எதையும் தெரிவிக்காதது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை மனதில் வைத்தே 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post