பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில், கல்வி உபகரணங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்காக கடைகளில் குவிந்து வருகின்றனர். புத்தகத்தை, டிபன் பாக்ஸ், பேனா, பென்சில், சிலேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்க, குழந்தைகள் ஆர்வத்துடன் கடைகளை முற்றுகையிடுகின்றனர். ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கல்வி உபகரணங்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு புத்தக பைகள் 500 முதல் 700 ரூபாய் வரை வாங்கியதாகவும் தற்போது ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை இருந்தால், 4000 முதல் 5 ஆயிரம் வரை செலவாகிறது எனவும் கூறுகின்றனர். சென்ற ஆண்டை காட்டிலும் பேனா, பென்சில், இங்க் பாட்டில், ஏ போர் பேப்பர் 25 பைசா, லாங் சைஸ் நோட், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 10 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்த புத்தகங்கள் உரிமையாளர்கள் இந்த ஆண்டு 15 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்து இருப்பதாகவும் விலை ஏற்றத்தால் குறைந்த அளவிலேயே பள்ளி பாட புத்தகங்களை வாங்க வருவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினாலும் பள்ளி பை உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் கட்டாயம் வெளியில் வாங்க வேண்டும்.