ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது திடீரென நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்குச் சென்றார். அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அப்போது தன்னை பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட அனுமதிக்குமாறு போலீசாருடன் அல்லு அர்ஜுன் வாக்குவாதம் செய்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.
படம் ரிலீஸாக ஒரு நாள் முன்னதாக அதாவது டிச. 4ம் தேதி மாலை படத்தின் சிறப்புக் காட்சிகள் ஹைதராபாத் முழுக்க திரையிடப்பட்டது. அப்போது அங்குள்ள பிரபல சந்தியா தியேட்டருக்கு திடீரென அல்லு அர்ஜுன் சென்றார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது: பொதுவாகப் பிரபலங்கள் இதுபோல தியேட்டருக்கு செல்லும் போது உள்ளூர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், நடிகர் அல்லு அர்ஜுன் அதுபோல எதுவும் சொல்லவில்லை. தியேட்டர் நிர்வாகம் தரப்பிலும் சொல்லவில்லை. மேலும், அல்லு அர்ஜுன் வந்து செல்ல தனி வழியும் ஏற்படுத்தப்படவில்லை. இதுவே கூட்ட நெரிசலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே கைது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த போலீசார், அல்லு அர்ஜுனைக் கைது செய்தனர். தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் அல்லு அர்ஜுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாகத் தன்னை கைது செய்த விதம் குறித்து அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
வாக்குவாதம்: இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது நேரடியாகப் படுக்கையறைக்கு வந்து தன்னை கைது செய்தது சரி இல்லை என்று குறிப்பிடும் அவர், உடைகளை மாற்றக்கூட டைம் தரவில்லை என்றும் இப்படி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்புகிறார்.
கைது செய்யப்படும் முன்பு காலை பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று கூட அவர் போலீசாரிடம் கேட்பதும் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக அல்லு அர்ஜுன் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்கிறார். இது நடந்த போது அவரது மனைவி சினேகா ரெட்டி மற்றும் தந்தை அல்லு அரவிந்த் ஆகியோர் அருகிலேயே இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
காபி: அல்லு அர்ஜுன் கேட்ட போதிலும் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட எல்லாம் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும், அவ்வளவு பதற்றத்திலும் அவர் பொறுமையாகக் காபி குடித்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.