தாம்பரத்தில் ஆசிரியையை மிரட்டி நகை பறித்த ஆட்டோ டிரைவர்.. நேர்மையான மகன் கொடுத்த மறக்க முடியாத பரிசு

post-img
சென்னை: திருச்சி குண்டூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தா மாரிகண்ணு என்பவர் விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தாம்பரத்துக்கு சென்றுள்ளார். அவர் சென்ற ஆட்டோவை ஒட்டிய டிரைவர் கணேசன், ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தாவை மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவரிடம் பணம் இல்லாத காரணத்தால 10 பவுன் நகையை பறித்துள்ளார். இந்நிலையில் 10 பவுன் நகையை பறித்த டிரைவர் கணேசனை அவரது மகனே போலீசில் பிடித்துக் கொடுத்தார். பயணத்தின் போது சில நேரங்களில் ஒரு சில மோசமான டிரைவர்களால் வழிபறிகள் நடக்கிறது. குறிப்பாக தனியாக செல்லும் வயதான பெண்கள் மற்றும் முதியர்களை குறிவைத்து வழிபறி நடக்கிறது.அப்படித்தான் ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்னை தாம்பரத்தில் வழிபறி செய்தார். அவரை அவரது மகனே போலீசில் பிடித்து கொடுத்துள்ளார். தவறு செய்தது தனது தந்தை என்ற போதிலும் நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்தவரை போலீசார் பாராட்டியுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். திருச்சி குண்டூரை சேர்ந்த 80 வயதாகும் வசந்தா மாரிகண்ணு என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவரது நெருங்கிய உறவினர்கள் எல்லாம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கிறார்கள். அவர்களை திருச்சியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து ஹைதராபாத் சென்று உறவினர்களை பார்த்துள்ளார். அவர்களை சந்தித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தா, தாம்பரத்தில் இருந்து திருச்சி செல்ல திட்டமிட்டார். விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தாம்பரத்துக்கு புறப்பட்டார். அந்த ஆட்டோவை தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் சாமியார் தோட்டத்தை சேர்ந்த 50 வயதாகும் ஆட்டோ டிரைவரான கணேசன் ஒட்டியுள்ளார். இதனிடையே தனியாக வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தாவை மிரட்டி பணம் பறிக்க கணேசன் திட்டமிட்டுள்ளார். குரோம்பேட்டை ஹவுசிங் போர்டு காலனி சாலை பச்சைமலை அருகே சென்றபோது வசந்தாவை மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கேட்டிருக்கிறார் ஆனால் அவரிடம் அதிக அளவில் பணம் இல்லை.. இதனால் வசந்தா கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் நகைகளை கணேசன் பறித்தார். பின்னர் அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தா, தட்டுத்தடுமாறி எழுந்தார். பின்னர் தாம்பரம் காவல் நிலையத்தில் சென்று நடந்தவற்றை கூறி புகார் அளித்தார். அவரிடம் தாம்பரம் போலீசார், ஆட்டோ குறித்தும், ஆட்டோ டிரைவர் குறித்தும் தீவிரமாக விசாரித்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் தனது வீட்டுக்கு சென்ற ஆட்டோ டிரைவர் கணேசன், 10 பவுன் நகையை பறித்த விஷயத்தை பெருமையுடன் கூறியிருக்கிறார். ம் அந்த நகையை அடகு வைத்து குடும்ப செலவுக்கு பயன்படுத்தலாம் என குடும்பத்தினரிடம் ஆசையாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ராமச்சந்திரன், இப்படி செய்வது நியாயமே இல்லை. நம்மை நம்பி வந்தவரை மோசம் செய்யக்கூடாது என்று தந்தையை கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் நகையுடன் தனது தந்தையுடன் தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கிருந்த போலீசாரிடம் விவரத்தை கூறி தந்தையையும், அவர் பறித்த நகையையும் போலீசாரிடமே ராமச்சந்திரன் ஒப்படைத்தார். ராமச்சந்திரனின் நேர்மையை பார்த்து ஆச்சர்யமடைந்த போலீசார் அவரை வெகுவாக பாராட்டினார்கள். அவரது தந்தை, கணேசனை கைது செய்தனர். தவறு செய்தது தனது தந்தை என்றாலும் நேர்மையாக தனது தந்தையை போலீசிடம் ஒப்படைத்த ராமச்சந்திரனை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மொதக் நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Post