இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் காக்னிசன்ட் நிறுவனம் அதன் வருவாய் குறையும் என்று கணித்துள்ளது, இந்த அறிவிப்பு மூலம் ஐடி சேவைகள் துறையில் உள்ள பிரச்சனைகளை உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் பிற ஐடி சேவை நிறுவனங்களை போலவே காக்னிசன்ட் நிறுவனமும் அமெரிக்க சந்தையில் இருந்து தான் அதிகப்படியான வருவாயை பெற்று வருகிறது. காக்னிசன்ட் சென்னையில் துவங்கப்பட்டாலும் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
ஐடி சேவை துறையில் இந்திய நிறுவனங்கள் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து நாட்டின் அக்சென்சர் மற்றும் அமெரிக்காவின் காக்னிசன்ட் நிறுவனத்தின் வர்த்தக போக்கு தான் இந்திய ஐடி நிறுவனங்களில் பிரதிபலிக்கும். இந்த வகையில் அக்சென்சர் நிறுவனம் அடுத்த 18 மாதத்தில் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எவ்விதமான அறிவிப்பையும், சிக்னல்-ஐயும் கொடுக்காத நிவையில் காக்னிசன்ட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. காக்னிசன்ட் நிறுவனம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு வர்த்தகத்தில் வருவாய் குறையும் என்பதை முன்கூட்டியே கணித்த நிலையில் செலவுகளை குறைத்து லாபத்தை நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக காக்னிசன்ட் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதேபோல் செலவுகளை குறைக்கும் விதமாக மில்லியன் கணக்கான சதுர அடி அலுவலக இடத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளது. ஆக்சென்ச்சர், டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் உடன் போட்டியிட வேண்டும் என்ற மாபெரும் இலக்குடன் புதிதாக தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் எஸ்.ரவிக்குமார் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளில் பணிநீக்கமும் அடங்கும்.
காக்னிசன்ட் நிறுவனம் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அதன் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியாவில் தான் உள்ளனர். காக்னிசன்ட் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் 19.2 முதல் 19.6 பில்லியன் டாலர் வரையிலான வருவாய் மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் 14.6 சதவீதம் என்ற குறைவான மார்ஜின் உடன் இயங்கி வரும் நிறுவனமாக காக்னிசன்ட் உள்ளது. டிசம்பர் காலாண்டையும் மார்ச் காலாண்டையும் ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்பது 3800 குறைந்து 3,51,500 ஊழியர்களாக உள்ளனர். இதன் மூலம் இக்காலண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 26 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக குறைந்துள்ளது.