மொத்தம் 240 கோடிப்பே ..வருமான வரித்துறை வாயை பிளக்க வைத்த சத்திரப்பட்டி செந்தில்குமார்! பகீர் தகவல்!

post-img
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த செந்தில்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கணக்கில்வராத ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ. 240 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய உறவினர் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கன்யாவதி இருவரும் இயக்குநர்களாக இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ராயர் சிட்ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சத்திரப்பட்டி செந்தில்குமார்: மேலும் தமிழ்நாடு,மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா,ஒரிசா, பீகார் குஜராத் பல மாநிலங்களில் ஏலச்சீட்டு மற்றும் தொழில் அதிபர்களுக்கு நிதி அளித்து வட்டி தொழில் செய்து வந்துள்ளார். அதே போல பழனி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் ராயல் கார்டன் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்ட அளவில் வீட்டு மனை விற்பனை வளாகத்தை திறந்து உள்ளார். வருமான வரித்துறை சோதனை: இதற்கிடையில் செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும், வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த வாரம் புதன்கிழமை பத்துக்கு மேற்பட்ட கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு பிரிவினர் சத்திரப்பட்டி செந்தில்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை ஈடுபட்டனர். திடீர் சோதனை: மற்றொரு பிரிவினர், நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் கணினி,லேப்டாப் மற்றும் வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரித்தனர். மேலும் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆவணங்கள் குறித்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியிடம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு: அதில் கணக்கில் வராத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்ற வருமான வரி சோதனை வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த செந்தில்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கணக்கில்வராத ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன. ஆவணங்கள் பறிமுதல்: மேலும், செந்தில்குமார், ரூ. 240 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,வரி ஏய்ப்பு செய்ததிற்கான சொத்து, முதலீடு ஆவணங்கள் சோதனையின் போது சிக்கின என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த செந்தில் குமார் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை: குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய உறவினர் என கூறப்பட்ட நிலையில், அதனை அண்ணாமலையும் ஒப்புக் கொண்டிருந்தார். வருமான வரித்துறை சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தியது. அவர் என்னுடைய உறவினர்தான். எங்களின் சொந்தக்காரருக்கு அவரின் குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருக்கிறோம் என அண்ணாமலையே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post