புஷ்பா 2 நெரிசல் விவகாரத்தில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சதி- நடிகர் அல்லு அர்ஜூன் பதிலடி

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்த சம்பவத்தில் தமது பெயரை கெடுக்க வேண்டும் என்று சிலர் சதி செய்வதாக நடிகர் அல்லு அர்ஜூன் பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கானா சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமக்கு எதிராக பேசியதைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் இதனைத் தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா- 2 திரைப்படம் ரூ1,500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சி வெளியிட்ட போது அல்லு அர்ஜூன் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என் பெண் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூனை சினிமா நடிகர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இது தொடர்பாக தெலுங்கானா சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூன் சில மணிநேரம்தான் சிறையில் இருந்தார். அவரை காண்பதற்காக திரை உலகமே சென்று வருகிறது. அல்லு அர்ஜூனுக்கு கிட்னி, கை கால் ஏதேனும் போய்விட்டதா? அவருக்கு ஏன் இப்படி ஆதரவு தெரிவிக்கின்றனர்? நெரிசலில் சிக்கி இறந்த பெண் குறித்து யாரேனும் கவலைப்பட்டார்களா? இப்படி அல்லு அர்ஜ்ஜூனுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தெலுங்கு திரை உலகம் என்ன சொல்ல வருகிறது? அல்லு அர்ஜூன் எந்த மாதிரியான மனிதர்? என காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், நடிகர் அல்லு அர்ஜூனா, புஷ்பா- 2 பட சிறப்பு காட்சி வெளியீட்டு நெரிசல் விவகாரத்தை முன்வைத்து என் பெயரை கெடுக்க நினைக்கின்றனர். நெரிசல் ஏற்பட்டது என்பது எதிர்பாராத ஒரு சம்பவம். சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு போலீசார் என்ன அறிவுரை வழங்கினார்களோ அதனை நான் பின்பற்றினேன். எந்த ஊர்வலமும் நான் நடத்தவில்லை. நெரிசலில் பெண் இறந்த சம்பவம் மறுநாள்தான் தெரிய வந்தது. நான் மருத்துவமனைக்கு நேரில் செல்ல விரும்பினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்துவதால் என்னுடைய வழக்கறிஞர்கள்தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தனர் என விளக்கம் தந்துள்ளார்.

Related Post