திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக இந்தியா முழுவதும், எல்லாருக்குமான பொதுவான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மத்திய பாஜக:
எனவே, பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புதிதாக கருத்துகளை கோரும் நடவடிக்கையையும், மத்திய சட்ட ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பொது அறிவிப்பை, கடந்த 14ம் தேதியே சட்ட ஆணையம் வெளியிட்டிருந்தது..
இதனிடையே, நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடியும் முன்வைத்திருந்தார்.. குறிப்பாக, "2 விதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது... நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் சொல்வதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியமே.. ஆனாலும், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
சிவில் சட்டம்:
எனினும், அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இரண்டுமே எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்க காரணம், இதை பாஜக அரசியலாக்குகிறது என்கிறார்கள்.. அதாவது விரைவில் எம்பி தேர்தல் வரப்போவதால், ஆளும் பாஜக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், சட்டம் மற்றும் பணியாளர் விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவானது, பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து மத்திய அரசின் சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளிடம் விளக்கம் பெற உள்ளது. இதற்காக இன்றைய தினம் தங்கள் முன்பு நேரில் ஆஜராகும்படியும் அவர்களுக்கு அழைப்பு அனுப்பியிருந்தது.
இன்று அழைப்பு: இந்த அழைப்பின்படி, சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகள், பொது சிவில் சட்டம் தொடர்பான அறிக்கை விபரங்களை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று தெரிவிக்க போகிறார்கள்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக, இதுவரை சுமார் 9 லட்சம் கருத்துகள் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.. விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், அந்த கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
எகிறும் எதிர்பார்ப்பு:
பொது சிவில் சட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பற்றிய விவாதத்துக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது.