பீகாரில் உச்சக்கட்ட குழப்பம்.. அங்கு என்ன தான் நடக்கிறது.. வந்து விழுந்த கேள்வி

post-img

பாட்னா: பீகாரில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் இப்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் தொடரும் நிலையில், பீகாரிலும் அரசியல் குழப்பம் உச்சத்தில் இருக்கிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கார்கே: ஜேடி(யு) கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்று கார்கே தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அங்கே நிதிஷ்குமாரின் ஜேடியு முக்கியமான கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "ஜேடியு கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து என்னிடம் தகவல் இல்லை. இந்த விவகாரம் குறித்து அவர்களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன். அவர்களிடம் பேச முயன்றேன் ஆனால் நிதிஷ் குமாரின் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.. பீகாரில் என்ன நடக்கிறது என்பது குறித்துத் தெரிந்து கொள்ள நாளை டெல்லி செல்ல உள்ளேன். என்ன தான் நடக்கிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

என்ன தான் நடக்கிறது: நிதிஷ் ராஜினாமா செய்யப் போகிறாரா என்பது குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. அவர் கவர்னரை சந்திக்க உள்ளாரா என்பது குறித்து எங்களிடம் இல்லை. இப்படி என்னிடம் எந்த தகவலும் இல்லாத போது எது உண்மையானது என்று சொல்ல முடியாது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

நள்ளிரவில் பரபர.. 5 முறை பறந்த போன் கால்.. காத்திருந்த லாலு பிரசாத் யாதவ்.. கைவிரித்த நிதிஷ்குமார்?

நிதிஷ்குமார் நாளைய தினம் 9ஆவது முறையாக மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்த முறை பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியை அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை நிதிஷ்குமார் தரப்பு உறுதி செய்யவும் இல்லை. அதேநேரம் மறுக்கவும் இல்லை. இதற்கிடையே அங்கே திடீரென உயர் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக புதிய அரசு அமைந்தால் மட்டுமே இதுபோல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

"இந்தியா" கூட்டணி: எனவே, இதுவும் ஆட்சி மாற்றத்தைக் காட்டுவதாகவே இருக்கிறது. தேசிய அரசியல் முழுக்கவே பீகாரில் என்ன நடக்கும் என்பதைச் சுற்றியே இருக்கிறது. ஏனென்றால் நிதிஷ்குமார் பாஜகவுடன் கை கோர்ப்பது என்பது பீகார் அரசியலை மட்டும் பாதிக்காது. ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" கூட்டணியை அது பாதிக்கும் என்பதே முக்கியம்.

லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குச் சவாலை ஏற்படுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்ட முடியவில்லை. அனைத்து கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வர தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக கார்கே கூறினார்.

ஒற்றுமை முக்கியம்: இது குறித்து கார்கே கூறுகையில், "அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வர நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நான் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசினேன்.. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் சொன்னேன், அப்போதுதான் நல்ல சவாலைக் கொடுக்க முடியும். இந்தியா கூட்டணி நமது நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும். யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

Related Post