ஹைதரபாத்: புஷ்பா 2 வெளியான போது நெரிசலில் சிக்கி இளம் பெண் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். சிறையில் சிறப்பு கைதியாக அவர் அடைக்கப்பட்ட நிலையில், நேற்றில் இருந்து உடையை கூட மாற்றவில்லை. மேலும் சிறிது நேரம் மட்டுமே ஓய்வு எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
புஷ்பா-1 படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில், உள்ளிட்டோர் மீண்டும் இணைந்து இருந்த புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் ஆயிரம் கோடி வசூலைத் தாண்டி உள்ளது. இதை அடுத்து இந்திய அளவில் மிகப்பெரும் நடிகர்களின் ஒருவராக அல்லு அர்ஜுன் உயர்ந்திருக்கிறார். அதே நேரத்தில் படம் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஐந்தாம் தேதி படம் வெளியான போது ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க அல்லு அர்ஜுன் சென்றார்.
அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிர் இழந்தார். இதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பேன் எனக்கூறிய அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிக்கடபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இனிமேல் வரும் காலங்களில் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என தெலுங்கானா அரசும் அறிவித்தது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை நேற்று ஜூப்ளி ஹிள்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி நடந்த சம்பவத்திற்கு நடிகரை மட்டுமே எப்படி பொறுப்பேற்க சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியதோடு அல்லு அர்ஜுனுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதை அடுத்து நேற்று இரவே அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தங்களுக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் அல்லு அர்ஜுனை விடுதலை செய்யவில்லை. இதை அடுத்து அவரை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறையில் அல்லு அர்ஜுன் சிறப்பு கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் சிறைத்துறை வேண்டுமென்றே அல்லு அர்ஜுன் விடுதலை விவகாரத்தில் அலைக்கழித்ததாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது அணிந்திருந்த உடையையே விடுதலை செய்யப்படும் வரை அல்லு அர்ஜுன் அணிந்திருந்தார். மேலும் அவர் சிறையில் இரவு முழுவதும் தூங்கவில்லை எனவும் சிறிது நேரம் மட்டுமே ஓய்வு எடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.