மும்பை: எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இப்போது வரிசையாகச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் உள்ள கூட்டணிக் கட்சிகள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மிகப் பெரிய அடியாக சமாஜ்வாதி கட்சி அதில் இருந்து விலகவுள்ளதாக அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் அபு அசிம் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மற்றொரு பெரிய அடி விழுந்துள்ளது.
சமாஜ்வாதி: அங்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு குறித்து தாக்ரே சிவசேனாவின் நர்வேகர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து விலக சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளது.
அதாவது நேற்றைய தினம் தாக்ரே சிவசேனா தலைவர் மிலிந்த் நர்வேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். பாபர் மசூதி தொடர்புடைய படத்தை சிவசேனாவின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் பாலாசாகேப் தாக்கரேவின் வாசகமான, "இதைச் செய்தவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்ற வாசகமும் இருக்கிறது.
பின்னணி: தாக்ரே சிவசேனாவின் எம் நர்வேகர் அக்கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். மேலும், ஆதித்யா தாக்கரே உடனும் கூட நல்ல உறவையே வைத்து இருக்கிறார். இப்படி தாக்கரே குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருப்போர் இந்த கருத்துகளைப் பதிவிட்டது பெரும் சர்ச்சையானது.
இந்தச் சூழலில் மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் வென்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகச் சொல்லி மகா விகாஸ் அகாடி எம்எல்ஏக்கள் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். இருப்பினும், அங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு வென்ற இரு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வெளியேறுகிறோம்: இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவர் அபு அசிம் ஆஸ்மி கூறுகையில், "பாபர் மசூதியை இடித்தவர்களை வாழ்த்தி சிவசேனா (தாக்கரே) சார்பில் ஒரு நாளிதழில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவின் உதவியாளரும் மசூதி இடிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிடுகிறார். இவை ஏற்பதாக இல்லை.
இதனால் நாங்கள் மகா விகாஸ் அகாடியில் இருந்து விலகுகிறோம். நான் (சமாஜ்வாதி கட்சித் தலைவர்) அகிலேஷ் சிங் யாதவிடம் இது குறித்துப் பேசவுள்ளேன். எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டே ஒருவர் இப்படிப் பேசினால், பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாங்கள் ஏன் அவர்களுடன் இருக்க வேண்டும்?" என்று சரமாரியாக விமர்சித்தார்.
ஏற்க முடியாது: சமாஜ்வாதியின் மற்றொரு எம்எல்ஏவான ரைஸ் ஷேக் இது குறித்துக் கூறுகையில், "உத்தவ் தாக்கரேவின் கட்சியைச் சேர்ந்த நர்வேகர் என்பவர் ட்வீட்டை பதிவிட்டு இருந்தார்.. அதற்கு நாங்கள் எதிர்வினை மட்டுமே ஆற்றியிருக்கிறோம்.
மகா விகாஸ் அகாடிக்கு இரு கொள்கைகள் உள்ளன. ஒன்று அரசியல் சட்டத்தைப் பாதுகாத்தல், மற்றொன்று மதச்சார்பற்ற பண்புகளை நிலைநிறுத்துவது இதன் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாக்கப்பட்டது. லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் சிவசேனா அனைத்து மதத்தினரின் வாக்குகளைப் பெற்று இருக்கிறது. அப்படியிருக்கும் போது தேர்தல் முடிந்தவுடன் இப்படிப் பேசுவதை ஏற்க முடியாது" என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage