கடவுள் நேரில் வந்து வரம் தந்தால்... மேடையில் ராமதாஸ் உருக்கம்! கலங்கிய பாமக நிர்வாகிகள்

post-img
சென்னை: கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் நான் என்ன கேட்பேன் தெரியுமா என கேட்டு தன் கட்சியினரையும் மேடையில் இருந்தவர்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்கலங்க வைத்துவிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய போர்கள் ஓய்வதில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை திநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது. இந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றன. விஸ்வநாதன் இந்த புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட அதை விஜிபி குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில் ஜாதி ஜாதி என சொல்லி தமிழக மக்கள் என்னை குறுகிய வட்டத்தில் அடைத்துவிட்டார்கள். தமிழகத்தில் இரட்டை குவளை முறையை ஒழித்தது ஜாதியா, நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவை நமக்கு தேவையான ஒன்று. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கூட கடலுக்கு போகாத தமிழ்நாடு, எங்கும் கஞ்சா விற்பனை செய்யாத தமிழ்நாடு வேண்டும் என நான் கேட்பேன். தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை மத்திய அரசு கொண்டு வருகிறது. அது போல் ஓட்டுக்கு காசு இல்லாத தேர்தலையும் கொண்டு வர வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அந்த வேட்பாளரை தூக்கி 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். நான் அரசியல்வாதி, எனது பணி போராடுவது, எனவே நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என தெரிவித்தார். அவர் அவ்வாறு பேசியதும் அவரும் கலங்கிவிட்டார், மேடையில் இருந்தவர்களும் கலங்கிவிட்டனர். இதே கருத்தை அவர் கடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முன் வைத்திருந்தார். விழுப்புரம் லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பேசிய போது அவ்வாறு தெரிவித்தார். அதாவது அனைவருக்கும் நல்ல வீடு, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு’ என்பதுதான் பாமகவின் குறிக்கோள். கல்வியில் பின்தங்கி, குடிசைகள் நிறைந்த மாவட்டமாக உள்ள விழுப்புரம் வளர்ச்சியடைய வேண்டும். அனைவருக்குமான மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை குடிப்பழக்கம் கெடுத்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், மது இல்லாத நாடு வேண்டும் என்பதையே வரமாகவே கேட்பேன். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related Post