திமுக அரசை கண்டித்து.. மத்திய அரசை வலியுறுத்தி.. மேலூரில் ஆர்ப்பாட்டம் அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

post-img
சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் பகுதி வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள திமுக அரசைக் கண்டித்தும்; டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உட்பட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டதை அடுத்து, இத்திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பால், தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக எம்.பிக்களும் மத்திய அரசிடம் வலியுறுத்தினர். தொடர் அழுத்தம் காரணமாக திட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரிட்டாபட்டி பகுதியை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகும் அபாய நிலை தொடர்கதையாக உள்ளது. அதேபோல், தமிழ் நாட்டில் மக்கள் நலன்களை பாதிக்கும் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு திராணியற்ற அரசாக திமுக ஸ்டாலின் மாடல் அரசு இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். அந்த வகையில், மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஏலம் நடைபெற்று, அதன் முடிவு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சுரங்கம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு வகைகளில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்ட திமுக ஸ்டாலின் மாடல் அரசின் முகத்திரையை, தகுந்த ஆதாரங்களோடு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் நான் தோலுரித்துக் காட்டியதும், திமுக அரசின் முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சரும், பல்வேறு வகைகளில் மடைமாற்றவே முயற்சித்தனர். திமுக அரசின் பதற்றத்திற்கான காரணம், சமீபத்தில் வெளிவந்த மத்திய அரசின் விளக்கம் வாயிலாக வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஏலம் அறிவிப்பு முதல், ஏலம் முடிவு வரை திமுக அரசு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. 2023ம் ஆண்டு அக்டோர் 3ம் தேதி அன்று துரைமுருகன் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்திலும்கூட, டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், மாறாக, ஏலத்தை மாநில அரசே ஏற்று நடத்த உரிமை வழங்கக் கோரி தான் குறிப்பிடப்பட்டுள்ளது” என திமுக-வின் மொத்த சதித் திட்டத்தையும் மத்திய அரசின் விளக்கம் அம்பலப்படுத்திவிட்டது. மக்கள் நலனை பாதிக்கும் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்த திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நாடகமாடி, மேலூர் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசைக் கண்டித்தும்; டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், டிசம்பர் 30ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில், மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ராஜன் செல்லப்பா தலைமையிலும்; மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரட்டை வேடமிட்டு மக்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அளித்துள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post