டெல்லி: ஒரே நாளில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- 30,000 டாலர் கேட்டு இ மெயில்-பதறிய பெற்றோர்!

post-img

டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு வல்லுநர்கள் சோதனை நடத்தினர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டெல்லியில் இ மெயில் மற்றும் இணைய தொலைபேசிகள் மூலம் பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி அரசும் டெல்லி போலீசாரும் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இன்றும் டெல்லியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ மெயிலில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த இ மெயிலில் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால் 30,000 அமெரிக்க டாலர் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. டெல்லி ஆர்கேபுரம் பப்ளிக் பள்ளி,. ஜிடி கோயங்கா பப்ளிக் பள்ளி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த 40 பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் இந்த பள்ளிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post