மீன்பிடித்தடை காலத்துக்கு மத்தியில் சென்னையில் கோழிக்கறியின் விலையும் கிலோ 300 ரூபாயை எட்டி உள்ளது, அசைவ பிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இறைச்சி மட்டுமின்றி மளிகைப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோடைக்காலத்தில் பொதுவாக கோழிகள் எடைகூடுவது இல்லை. இதனால், சந்தைக்கு வரும் கோழிக்கறியின் எடை குறைந்திருப்பதும், மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களின் விலையும் அதிகரித்து காணப்படுவதும் ஒன்று சேர்ந்து கோழிக்கறி விலையை அதிகரிக்கக் காரணிகளாக அமைந்துவிட்டதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோழிக்கறி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ கோழிக்கறி சில்லரை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் கிலோ ரூ.220 -க்கும், மே மாதம் கிலோ ரூ.240-க்கும் விற்கப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் கோழிக்கறி விலை ரூ.260 ஆக உயர்ந்து தற்போது, ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டுக்கறியின் விலை எப்போதும் உள்ள 900 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், மீன் விலை அதிகமாக உள்ளது. சிறிய வகை மீன்களே கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது. இதனால், பிரியாணி முதல் ப்ரைட் ரைஸ், பீட்சா, பர்கர் வரை பெரும்பாலும் சிக்கன் பயன்படுத்தப்படுவதால் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் உணவக வியாபாரிகள்.
மீன்பிடி தடைக்காலத்தால் சிக்கன் விற்பனை அமோகமாக இருந்ததாகவும் விலை உயர்வால் யோசித்து யோசித்து மக்கள் சிக்கன் வாங்குவதாகவும் வேதனையுடன் கூறுகிறார்கள் கோழிக்கறி விற்பனையாளர்கள். வாரத்திற்கு 300 முதல் 600 பெட்டிகளில் கோழிகளை இறக்குமதி செய்வதாகவும் விலை உயர்வால் கோழிகளுக்கு தீவனம், தண்ணீர், ஆட்கூலி, டீசல் விலை உயர்வு என பொருளாதார சிக்கல் ஏற்படுவதாகவும் இறக்குமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.
இதே போல், அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், கடந்த வாரம் ரூ.118 ஆக இருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலை இப்போது ரூ.42 உயர்ந்து ரூ.160 ஆக அதிகரித்திருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். இது வரலாறு காணாத ஒன்றாகும். பிற பருப்பு வகைகளின் விலைகளும், மளிகைப் பொருட்களின் விலைகளும் 8% முதல் 20% வரை உயர்ந்திருக்கின்றன. சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்