திருப்பூர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைத்தும் இதுவரை எந்தவித துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கைவரிசை காட்டிய பவாரியா கொள்ளையர்கள் மீண்டும் தமிழகத்தில் ஊடுருவி உள்ளார்களா என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
கடந்த 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
மேலும் வீட்டிலிருந்த எட்டு சவரன் தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டது. இதை அடுத்து கொலை கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையை துவக்கினர். மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் உத்தரவைத் தொடர்ந்து, டிஐஜி சரவண சுந்தர் மேற்பார்வையில் 10 தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.
தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் குற்றவாளிகள், குற்றவாளிகள் என பலரை விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த நிலையில் அது தொடர்பாகவும் தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்து ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில் தற்போது வரை விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதை அடுத்து தனிப்படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் இதே போல கொலை சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது போலீசாரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி குடும்பத்தினருக்கு எந்தவித முன் விரோதமோ அல்லது பிரச்சனையோ இல்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்த, தற்போது 14 தனி படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த 15 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் நடந்த கொடூரமான கொலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காங்கேயம், பல்லடம், அவிநாசி, தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், போர்வை விற்பவர்கள் உள்ளிட்டோரின் விபரங்களையும் சேகரித்துள்ளனர்.
இப்படி பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தாலும் குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அட்டகாசம் செய்த பவாரியா கொள்ளை கும்பல் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கி உள்ளதா என்ற அச்சம் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவாரியா கொள்ளை கும்பலின் அட்டூழியம் அதிகமாக இருந்தது. இதை அடுத்து அப்போதைய டி.ஐ.ஜி ஜாங்கிட் நேரடியாக அவர்களது இடத்துக்கு சென்று கொள்ளை கும்பலை பிடித்தார்.
இந்த கதை தான் பின் நாட்களில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படமாக வெளியானது. இந்த நிலையில் பல்லடத்தில் நடந்திருக்கும் கொலை சம்பவமும் பவாரியா கொலை கும்பலின் பாணியில் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உடலில் ஆறு முறை மட்டுமே அடித்துக் கொல்வது, ஒருவரின் உச்சந் தலையில் அடித்துக் கொல்வது என குறிப்பிட்ட சில கொலை பாணிகளை பவாரியா கும்பல் கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் எப்போதும் வடமாநிலங்களில் அதிகமாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை. தென்னிந்தியா குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் தான் கொள்ளையடித்துவிட்டு சரக்கு லாரிகளில் சொந்த இடங்களுக்கு தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக பல்லடம் கொலை சம்பவத்திலும் பவாரியா கொலை கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அவர்களின் செல்போன் எண்கள் மற்றும் பிற விவரங்களைக் கொண்டு அடையாளம் காணும் பணியானது தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் ஏராளமான பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடியேறியிருக்கும் நிலையில் தொழிலாளர்கள் என்ற போர்வையில் பவாரியா கொலை கும்பல் புகுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage