தஞ்சாவூர்: ஒவ்வொரு சமூகத்திலும் திருமண வயதில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இதனால் பெண் கிடைப்பது என்பததே இன்றைக்கு சவாலாக மாறி உள்ளது. இந்ந சூழலில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருமணம் செய்து வைக்காததன் காரணமாக அப்பாவை வெட்டிய மகன் இன்று உயிரோடு இல்லை.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய சூழலில் திருமணம் என்பது 30 வயதை நெருங்கும் இளைஞர்களுக்கு எளிதாக நடப்பது இல்லை. 90களில் பிறந்த பலருக்கு திருமணம் என்பது கனவாகிவிட்டது. 30 முதல் 35 வயதை கடந்துவிட்ட நிலையில், பலர் பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இன்றைக்கு படித்த பல 2கே கிட்ஸ் பெண்களின் பெற்றோர், நன்கு வேலையில் உள்ள, வசதியான மாப்பிள்ளை தான் வேண்டும், அதேநேரம் அழகாக இருக்க வேண்டும், எந்த கடனும் இருக்க கூடாது, தனிக்குடித்தனம் அழைத்து செல்ல வேண்டும், ஐடி வேலையில் அல்லது அரசு வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதில் வேலை இருந்தால் அழகு என்பதில் சிக்கல் வருகிறது. சிலருக்கு அழகு இருந்தால் பணம் இருப்பது இல்லை.. இப்படி சிக்கல்களை சந்திப்பது ஒருபுறம் எனில், ஒவ்வொரு சமூகத்திலும் திருமண வயதில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால் பெண் கிடைப்பது என்பததே இன்றைக்கு சவாலாக மாறி உள்ளது. இந்ந சூழலில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருமணம் காரணமாக அப்பாவை வெட்டிய மகன் இன்று உயிரோடு இல்லை..
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மேலப்புனவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த 55 வயதாகும் சேகருக்கு, செந்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விக்னேஷ்(29), ராஜேஷ்குமார்(25), மூர்த்தி(23) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் விக்னேஷ், தஞ்சை மாவட்டம் திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக வேலை செய்து வந்தார். விக்னேஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..
விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு தனது தந்தையிடம் தனக்கு ஏன் இன்னும் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை? என்று கேட்டு தகராறு செய்தாராம். இந்த தகராறு முற்றியதில் வீ்ட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தந்தை என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த சேகர் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆத்திரத்தில் தந்தையை வெட்டியதால் மிகுந்த வேதனை அடைந்த விக்னேஷ் செய்வதறியாமல் பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீயின் வேதனை தாங்காமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் தந்தையை வெட்டிய தீயணைப்பு வீரர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)