வெறும் 20 நிமிடத்தில் 70 கிமீ பயணிக்கலாம்.. அதுவும் பெங்களூர் டிராபிக்கில்.. அசத்த வரும் புது திட்டம்

post-img

பெங்களூர்: பெங்களூர் டிராபிக் எந்தளவுக்கு இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.. இதனால் நகரின் எந்த பகுதியில் இருந்தும் பெங்களூர் விமான நிலையத்திற்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஆனால், இந்த நிலைமை இப்போது மாறப் போகிறது. இதன் மூலம் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து கூட வெறும் 20 நிமிடத்தில் பெங்களூர் ஏர்போர்ட் வந்தடையலாம்.
பெங்களூர் ஏர்போர்ட் நகருக்கு வெளியே பல கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் பெங்களூரில் இருந்து ஏர்போர்ட் வரவே பல மணி நேரம் வரை ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்.
வெறும் சில நிமிடங்கள்: ஆனால், இந்த நிலை விரைவில் மாறப் போகிறது. இதன் மூலம் பெங்களூர் நகரில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் பெங்களூர் விமான நிலையத்திற்கு வெறும் சில நிமிடங்களில் வந்துவிடலாம். இதற்காகப் பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், அங்குள்ள பிரபல ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்லா ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் நகரில் எந்த இடத்தில் இருந்தும் எலக்டிரிக் ஏர் டாக்ஸி மூலம் சில நிமிடங்களில் ஏர்போர்ட்டிற்கு வந்துவிட முடியும்.
1936ஆம் ஆண்டு தனது 21 வயதில் பைலட் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணான சர்லா தக்ராலின் நினைவாக இந்த நிறுவனத்திற்கு அதன் நிறுவனர்கள் சர்லா ஏவியேஷன் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி புறப்படவும் தரையிறங்கவும் விமானத்தைப் போல ரன்வே எதுவும் தேவையில்லை. வழக்கமான ஹெலிகாப்டர்கள் போல ஒரே இடத்தில் இருந்து செங்குத்து டேக் ஆஃப் செய்யவும் தரையிறங்கவும் முடியும். இதற்காக eVTOL என்ற தொழில்நுட்பம் இதில் இடம்பெற்று இருக்கிறது.
வெறும் ரூ. 1700: எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து வெறும் 20 நிமிடம்: முதற்கட்டமாக எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு ஏர் டாக்ஸி சேவைகளை வழங்க சர்லா ஏவியேஷன் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக டாக்ஸியில் செல்ல ரூ.2000 வரை ஆகும் நிலையில், ஏர் டாக்ஸியில் கட்டணம் வெறும் ரூ. 1,700ஆக மட்டுமே இருக்கும்.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து பெங்களூர் ஏர்போர்ட் 74 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் பெங்களூர் செல்ல குறைந்தது 1.30 முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், சர்லா ஏர் டாக்ஸி வந்தால் வெறும் 19 நிமிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து பெங்களூர் ஏர்போர்ட்டிற்கு செல்ல முடியும்.
பாதுகாப்பானது: வழக்கமான ஹெலிகாப்டரை விட தங்கள் ஏர் டாக்ஸி 100 மடங்கு பாதுகாப்பானதாக இருப்பதாக சர்லா ஏவியேஷன் நிறுவனம் கூறுகிறது. அவர்கள் மேலும் கூறுகையில், "ஹெலிகாப்டர்களில் உள்ள மோட்டார் மற்றும் ரோட்டர்களில் சிக்கல் வர ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், எங்களின் ஏர் டாக்ஸியில் அதற்கு வாய்ப்பே இல்லை.
எங்கள் விமானத்தில் மொத்தம் ஏழு ப்ரொப்பல்லர்கள் உள்ளன. எனவே, ஒன்று வேலை செய்யவில்லை என்றாலும் மற்றவற்றை வைத்துச் சமாளிக்க முடியும். மேலும், எங்கள் விமானத்தில் தவறாகப் போக வாய்ப்பு இருக்கும் இடங்களில் 3 முதல் 5 லேயர் பாதுகாப்பு இருக்கிறது. எனவே பாதுகாப்பில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை" என்றார்.
பல இடங்களுக்கு வரும்: கர்நாடக அரசின் கட்டிட விதிமுறைகளின்படி 60 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள கட்டிடங்களில் ஹெலிபேடுகள் அமைக்கலாம். இதனால் ஏர் டாக்ஸி சேவைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை எளிதாக உருவாக்க முடியும் என்றும் சர்லா ஏவிஷன் தரப்பில் குறிப்பிடப்பட்ட இருக்கிறது.
பேட்டரி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வலிமையானதாக மாறி வருகிறது. அதாவது சிறிய சைஸ் பேட்டரிக்களில் இப்போது அதிக ஆற்றலைச் சேமிக்க முடிகிறது. அதேபோல பேட்டரிக்களின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் நகருக்குள் பயணங்களை மேற்கொள்வதில் ஏர் டாக்ஸிக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post