பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 18 நாட்களுகு 3,000 கன அடிநீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை கன்னடர்கள் மீது எழுதப்பட்ட மரண சாசனம் என கண்டனம் தெரிவித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான குமாரசாமி.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று குழு இரு மாநில நிலைமைகளை ஆராய்ந்து நீர் பகிர்வு குறித்த பரிந்துரைகளை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கும். காவிரி மேலாண்மை ஆணையமான இதனை பரிசீலித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கும். இந்த நடைமுறைகளின் கீழ்தான் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
கன்னட அமைப்பினர் போராட்டம்: இதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. மண்டியா பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து பெங்களூர் பந்த் நடத்தப்பட்டது. அத்துடன் நாளை மறுநாள் செப்டம்பர் 29-ந் தேதி கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும் 3,000 கன அடி நீர்: இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டதின் முடிவில், காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு அடுத்த 18 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கும் கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சித்தராமையா பதில்: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.
குமாரசாமி: ஆனால் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை என்பது கன்னடர்கள் மீது எழுதப்பட்ட மரண சாசனம் என கூறியிருக்கிறார் முன்னாள் முதல்வர் குமாரசாமி. மேலும் பற்றாக்குறை காலங்களில் எவ்வளவு காவிரி நீரை பகிர வேண்டும் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதனை முடிவு செய்யும் வரை காவிரி நீரை திறக்க முடியாது என கர்நாடகா அரசு அடம்பிடிக்க வேண்டும் என்றார் குமாரசாமி.