உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பயணிகளுடன் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பேருந்து லேசாக சாய்ந்ததும், பீதியடைந்த பயணிகள், அலறியடித்து ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்.
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடுமையான பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் நீர் நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் கிட்டத்தட்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் வெள்ளத்தை கடக்க முயன்ற பேருந்து, நடுவழியில் சிக்கியது. பேருந்து லேசாக சாய்ந்ததும், பயணிகள் சிலர் மீட்புப்படையினருக்கும், காவலர்களுக்கும் தகவல் அளித்தனர்.
ராம்கர் கிராமத்தில் நடந்த இந்த விபத்தில் காவலர்கள் வருவதற்குள் உள்ளூர் மக்களே வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தோரை பாதுகாப்பாக மீட்டனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் ஜன்னல் வழியாக தப்ப முயன்ற நிலையில் வெள்ளத்தில் பேருந்து அடித்துச்செல்லப்படாமல் நின்றது. இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.