சென்னை: "குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள்" எனக் கிண்டலாக விமர்சித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
நேற்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, இந்தப் பொதுக்குழுவில் ஆவேசமாகப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு எவ்வளவு தூரம் நெருக்கடி கொடுக்கிறதோ அவ்வளவு தூரம் அதிமுக வளரும். 2026ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் அரியணை ஏறும்." என்றார்.
மேலும், "சட்டப்பேரவை நாள்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும் போது கட் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக அரசே இருந்திருக்காது. 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. அதிமுகவின் எழுச்சி, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றியாக இருக்கும்" எனப் பேசினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல 'வாழைப்பழ காமெடியை' போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ- சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் மாண்புமிகு முதலமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது. ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் 'வலிக்காமல் வலியுறுத்திவிட்டு' மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அதில், "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் எனக் கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பொதுக்குழுவைக் கூட்டி விட்டோமே தீர்மானத்திற்கு என்ன செய்வது, எங்கே போவது, குறையின்றி நடந்துவரும் திமுக அரசு மீது எதைச் சொல்லி பழி போடுவது எனத் தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் எனக் கதை கட்டியிருக்கிறார் 'கட்டுக்கதை' பழனிசாமி.
தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம். இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.