தேனி: வனப்பாதையில் நடந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையால் அவர்கள் அரைமணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வர முடியும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
சபரிமலைக்கு பாதயாத்திரையாக வரும் ஐயப்ப பக்தர்கள் புல்மேடு, எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு செல்கிறார்கள். எருமேலி வனச்சாலை என்பது அழுதா நதியில் இருந்து 30 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் கரடுமுரடான பாதையாகும்.
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என கூறியபடியே பக்தர்கள் சென்றாலும் அவர்கள் கடுமையான பனிப்பொழிவு, அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் கடும் அவதியடைகிறார்கள். எல்லாவற்றையும் விட அங்கு பக்தர்களை யானை கூட்டங்கள் அச்சுறுத்துகின்றன.
இவற்றையெல்லாம் சமாளித்து பக்தர்கள் ஒருவழியாக சன்னிதானத்தை வந்தடைகிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் சுவாமியை தரிசனம் செய்ய அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் தரிசனம் செய்வதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி முதல் இந்த பக்தர்களுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முக்குழியில் நுழைவுச் சீட்டு சீல் போட்டு வழங்கப்படும். அது போல் வரும் வழியான புதுக்குறிச்சி தாவளை, செரியானவட்டம் ஆகிய இடங்களிலும் முத்திரை (சீல்) குத்தப்படுகிறது.
இந்த 3 சீல் போட்ட நுழைவுச் சீட்டுகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய போலீஸார் அனுமதி அளித்து வருகிறார்கள். இதன்படி வனப்பாதையில் வரும் பக்தர்கள் சபரிமலையில் உள்ள பெரிய நடை பந்தலில் இருந்து தனிப்பாதை வழியே 18ஆம் படியேறி ஐயனை தரிசிக்கிறார்கள். வரிசையில் காத்திருக்காமல் அரை மணி நேரத்தில் தரிசிக்கிறார்கள். இந்த நடைமுறை பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாளில் புல்மேடு வழியாக 2516 பேரும் எருமேலி வழியாக 650 பேரும் வந்தனர். இவர்களுக்கு அரை மணி நேரத்தில் ஐயனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சபரிமலையில் இந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் ஐயனை தரிசிக்க ஆன்லைன் புக்கிங் என்பது கட்டாயம் ஆகும்.
ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் புக்கிங் என மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஒரு நாளைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
மகா சங்கராந்தி நாளன்று மகர ஜோதியை காண ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கடந்த சில தினங்களாக சுவாமி தரிசனம் செய்ய அதிகபட்சமாக 18 மணி நேரம் ஆகிறது. https://sabarimala.kerala.gov.in/ என்ற ஐடியில் பக்தர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இதில் போன் எண்ணை கொடுத்து அவர்களுக்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து தனிக் கணக்கு தொடங்கிவிட வேண்டும்.
பிறகு பெயர், முகவரி, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்களை பதிவிட வேண்டும். பிறகு தரிசன நாள், செல்லும் பாதை, சபரிமலை கோயிலை அடைந்து தரிசனம் செய்வதற்கான நேரம் உள்ளிட்டவை தேர்வு செய்து உறுதி செய்தால் விர்சுவல் க்யூ டிக்கெட் முன் பதிவு ஆகிவிடும். பிறகு இந்த டிக்கெட்டை தரிசன கவுன்ட்டரில் கொடுத்தால் அவர்கள் ஸ்கேன் செய்து சரி பார்த்து பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.