பாஜகவையும் வெளுத்த அன்புமணி! அரிட்டாபட்டிக்கு சென்று டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு

post-img
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டி கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பொதுமக்களை இன்று நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ச்சியாக அரிட்டாபட்டி, வல்லாளபட்டி பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரிட்டாபட்டி பகுதி மக்களின் போராட்டத்திற்கு இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி, "தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விவசாய நிலத்தை கூட எந்த அரசும் கையகப்படுத்த கூடாது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை தடுக்க எந்த எல்லைக்கும் நாங்கள் போவோம். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி.. மக்களை ஏமாற்றி உள்ளனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் விடுவதற்கு முன்பு மத்திய அரசுக்கு எந்த எதிர்ப்பையும் மாநில அரசு தெரிவிக்கவில்லை. நம் மண்ணை அழிக்க நினைப்பவர்கள் படுபாவிகள். அவர்களை நாம் சும்மா விடக் கூடாது. ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதாக ஒருபுறம் தெரிவிக்கும் திமுக, இப்போது இங்கு டங்ஸ்டன் அமைக்க ஆதரவு தெரிவித்து இரட்டை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு நடத்திய டங்ஸ்டன் சுரங்க ஏல கூட்டங்களில் தமிழக அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். டங்ஸ்டன் விவகாரத்தில் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார்கள். விவசாயிகள் என் கடவுள். அவர்கள் வாழும் மண்ணை காக்க வேண்டியது என்னுடைய கடமை. ஓட்டுக்காகவோ, அரசியலுக்காகவோ நான் வரவில்லை. உணர்வுப்பூர்வமாக வந்துள்ளேன். பாரம்பரிய பல்லுயிர் சூழலியல் தளம் அமைந்துள்ள இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும். எங்களிடம் ஆட்சி இருந்தால் தமிழ்நாட்டில் எந்த சுரங்கமும் அமைக்க முடியாது என சட்டம் கொண்டு வருவோம். திடீரென இரண்டு நாட்களுக்கு முன்னர் டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்தி விட்டதாக வதந்தியை பரப்பினார்கள். திட்டம் நிறுத்தப்படவில்லை, மறு ஆய்வு தான் செய்யவுள்ளனர். இவர்கள் பொய் சொல்வதில் பி.எச்.டி முடித்தவர்கள்" எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "டங்ஸ்டன் சுரங்கம் தேவையில்லாத ஒன்று. இதில் பெரிய சூழ்ச்சி உள்ளது. டங்ஸ்டன் குறித்த தகவல்களை எல்லாம் மத்திய அரசுக்கு கொடுத்ததே தமிழக அரசு தான். இதே பகுதியில் கிரானைட் குவாரிக்காக தனியார் நிறுவனத்திடம் இருந்த நிலம் ஏன் மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது? டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடையூறாக இருக்கும் என தமிழக அரசு செய்த திட்டம் அது. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான மத்திய அரசு நடத்திய கூட்டங்களில் மாநில அரசின் அதிகாரிகள் பங்கேற்றனர். டங்ஸ்டன் சுரங்கம் வராது என இப்போது தீர்மானம் போடுகிறார்கள். இதையே தான் கச்சத்தீவு விவகாரத்திலும் செய்தார்கள். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல, இந்த பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய மண்டலம் என சட்டம் நிறைவேற்ற வேண்டும். மண்ணை அழித்துவிட்டு நாளைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் யாரிடம் பிச்சை எடுக்கப் போகிறோம். ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவருக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. இதில் கட்சி, கூட்டணி பற்றியெல்லாம் நான் பேசவில்லை. மத்திய அரசு செய்தது தவறு என கண்டிக்கிறேன். இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post