இனி பிஃஎப் பணத்தை ஏடிஎம்மிலேயே எடுக்கலாம்.. குட்நியூஸ் சொன்ன மத்திய அரசு.. 2025 ஜனவரியில் அமல்

post-img
டெல்லி: இபிஃஎப்ஓ எனும் தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை பொதுமக்கள் இனி எளிமையாக ஏடிஎம் இயந்திரம் மூலம் எடுக்கும் வசதி அடுத்த ஆண்டு (2025) முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு இபிஃஎப்ஓ எனும் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பணி செய்யும் காலத்தில் ஒவ்வொரு பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல் அவர்கள் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனம் சார்பிலும் குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. தற்போது இபிஃஎப்ஒ திட்டத்தில் இருக்கும் பணத்தை பொதுமக்கள் நினைத்தால் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பெற்று கொள்ள முடியும். இப்படி பணத்தை முன்கூட்டியே எடுக்க ஒருவர் விண்ணப்பம் செய்யும்போது குறைந்தபட்சம் 15 நாட்கள் முதல் அதிகபட்சம் 25 நாட்களுக்கும் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரும். இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் 3.0 (EPFO 3.0) என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்து கொள்ள வாய்ப்பு வழங்க உள்ளது. இந்த திட்டம் 2025ம் ஆண்டில் இருந்து நாட்டில் அமலாக உள்ளது. இதனை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா உறுதி செய்துள்ளார். இதுபற்றி சுமிதா தாவ்ரா கூறியதாவது: இபிஃஎப்ஓவில் இருந்து பணம் எடுக்க விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து பணம் வழங்கி வருகிறோம். இந்த நடைமுறையை இன்னும் எளிமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஃஎப்ஓவில் இருந்து பணம் எடுக்க விரும்புவோர் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுத்து கொள்ள முடியும். இதற்கான தொழில்நுட்ப வசதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு 2 அல்லது 3 மாதங்களுக்கும் ஒருமுறை இந்த நடைமுறையில் அடுத்தக்கட்ட முன்னேற்றங்களை நீங்கள் அறிவீர்கள். நிச்சயம் 2025 ஜனவரி மாதத்துக்குள் மிகப்பெரிய மாற்றம் என்பது இருக்கும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறைக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் இனி பொதுமக்கள் இபிஃஎப்ஓ திட்டத்தில் உள்ள பணத்தை எடுக்க அடுத்தவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. நம் ஊரின் பக்கத்தில் உள்ள ஏடிஎம் மூலமாகவே அதனை எடுத்து பயன்படுத்தி கொள்ள முடியும். நம் நாட்டை பொறுத்தவரை இபிஃஎப்ஓ திட்டத்தில் மொத்தம் 70 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பேர் உள்ளனர். அதாவது மொத்தம் 7 கோடி பேர் இபிஃஎப்ஓ திட்டத்தில் கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்கில் சேமிக்கப்படும் பணத்துக்கு தற்போது ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Post