இருநாட்டு உறவு சிறப்பாக இருக்கணுமா? சீன அதிபருக்கு மோடி போட்ட கண்டிஷன்..

post-img

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்து வந்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக இம்மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, "உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. யுபிஐ தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வளர்ச்சி தெற்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று பேசியிருந்தார். இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் சுருக்கமாக கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் கடைசியாக ஒன்றாக சந்தித்து பேசிக்கொண்டனர். ஆனால் அடுத்த மாதமே லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் அடுத்து வந்த காலகட்டங்களில் மத்திய அரசு சீனா விஷயத்தில் கறார் காட்டி வந்தது. இப்படி இருக்கையில் இந்த மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்வார்களா? என்று கேள்வி எழுந்திருந்தது. அதேபோல இருவரும் கலந்துரையாடியுள்ளார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, "இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் மேற்கு LAC உடன் இரு நாடுகளுக்கும் இருக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளை பிரதமர் மோடி எடுத்துரைத்துள்ளார். எல்லை பகுதிகளில் அமைதியை பேணுவதும், இரு நாட்டின் உறவுகளை இயல்பாக்க LACஐ மதிப்பது குறித்தும் பிரதமர் மோடி அடிக்கோடிட்டு பேசியுள்ளார்" என்று குவாத்ரா கூறியுள்ளார். இருப்பினும் இந்த கலந்துரையாடல் குறித்து சீனா தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related Post