டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் எவை எந்த பட்டியலை வெளியிடும். அதன்படி இப்போது ஸ்விக்கி நிறுவனம் தங்கள் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு லிஸ்டை வெளியிடும்.
அதன்படி ஸ்விக்கி நிறுவனம் இந்தாண்டிற்கான லிஸ்டை வெளியிட்டுள்ளது. இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி இருக்கிறது. இந்தாண்டு மட்டும் சுமார் 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நிமிடத்திற்கு 9 பிரியாணி, அதாவது கிட்டதட்ட நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தொடர்ச்சியாக 9வது ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி தொடர்ந்து இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி அதிகபட்சமாக 4.9 கோடி முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி ஆர்டரில் நகரம் வாரியாக பார்த்தோம் என்றால் 97 லட்சம் பிரியாணி உடன் ஹைதராபாத் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து 77 லட்சம் பிரியாணி உடன் பெங்களூர் 2ஆவது இடத்திலும் 46 லட்சம் பிரியாணி உடன் சென்னை 3வது இடத்திலும் இருக்கிறது..
சிக்கின் பிரியாணிக்கு பிறகு மட்டன் பிரியாணி ஹைதராபாத்தில் மட்டும் 22 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், புதிதாக ஸ்விக்கியில் இணைந்தவர்களில் சுமார் 28 லட்சம் பேர் நேரடியாக எடுத்தவுடன் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து 23 85 லட்சம் ஆர்டர்களுடன் தோசை, 78 லட்சம் ஆர்டர்டளுடன் இட்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. பெங்களூரில் தான் அதிகபட்ச தோசை ஆர்டர் வந்துள்ளது. டெல்லியில் சோலா பூரி, சண்டிகர் மற்றும் கொல்கத்தா முறையே ஆலு பரந்தா மற்றும் கச்சோரி ஆகியவை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளாக இருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.49,900க்கு ஆர்டர் செய்ததே மிக பெரிய ஆர்டராக இருக்கிறது. அதில் அவர் 55 ஆல்ஃபிரடோ உணவுகள், 40 மேக் மற்றும் சீஸ், 30 ஸ்பாகத்தி ஆர்ட்ர செய்து இருக்கிறார். மேலும், இரவு உணவுகள் தான் அதிகபட்சமாக ஸ்விக்கியில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. சுமார் 21.5 கோடி டின்னர்கள் ஸ்விக்கி தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இது ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட மதி உணவுகளைக் காட்டிலும் சுமார் 29 சதவீதம் அதிகமாகும்.
ஸ்விக்கி தனது டெலிவரி ஏஜெண்டுகள் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. ஸ்விக்கி டெலிவரி ஏஜெணண்டுகள் சுமார் 196 கோடி கிமீ பயணித்து உணவுகளை டெலிவரி செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையைச் சேர்ந்த கபில் குமார் பாண்டே இந்த ஆண்டு 10,703 ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளார். பெண் டெலிவரி ஏஜெண்ட் எனப் பார்த்தோம் என்றால் கோவை சேர்ந்த சேர்ந்த காளீஸ்வரி என்பவர் 6,658 ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளார்..
2024ஆம் ஆண்டில் 24.8 லட்சம் ஆர்டர்களுடன் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸாக சிக்கன் ரோல் இருக்கிறது. அதைத் தொடர்ந்து 16.3 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் மோமோஸ், 13 லட்சம் ஆர்டர்களுடன் பிரஞ்ச் பிரைஸ் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
நள்ளிரவு நேரங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக சிக்கன் பர்கர் இருக்கிறது. சுமார் 18 லட்சம் சிக்கன் பர்கர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும், டெல்லியை சேர்ந்த யூஸர் ஒருவர் ஒரு நாள் இரவு ஒரே ஆர்டரில் 250 வெங்காய பீட்சாக்களை ஆர்டர் செய்து இருக்கிறார்.