சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக நெல்லையில் இருந்து புறப்படும் நேரமும், சென்னையில் இருந்து புறப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரயில் பயணிகளின் தேவைகளை அறிந்து பல்வேறு வசதிகளை ரயில்வே மேம்படுத்தி வருகிறது. தற்போது, வரும் புத்தாண்டு முதல் அனைத்து ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதேபோன்று பல ரயில் சேவைகளின் பயண நேரத்தையும் ரயில்வே மாற்றியமைத்துள்ளது. தற்போது புதிதாக ரயில்வே கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நெல்லை - சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மற்றும் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இரு மார்க்கத்திலும் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வந்து சேரும் நேரத்தில் மாற்றமில்லை. இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் சென்னை - நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் - 12631) இரவு 8.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 6.40 மணிக்கு இந்த ரயில் நெல்லை ரயில் நிலையத்தை அடையும். தற்போது இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் வழக்கமாக புறப்படும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். ஆனால் வேகம் அதிகரிப்பு காரணமாக நெல்லை ரயில் நிலையத்தை சென்று அடையும் நேரம் மாற்றமில்லை. வழக்கமாக செல்லும் நேரத்தில் அதாவது 6.40 மணிக்கு சென்றடைந்துவிடும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில் (வண்டி எண் 12632) நெல்லையில் இருந்து சென்னைக்கு இரவு 8.05 மணிக்கு ரயில் புறப்படுகிறது. சென்னை எக்மோர் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 7.00 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலும் வழக்கமாக செல்லும் நேரத்திற்கு பதிலாக 35 நிமிடம் தாமதமாக 8.40 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
அதே நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வழக்கம்போல் மறுநாள் காலை 7.00 மணிக்கு சென்றடையும். பயண நேரம் குறைக்கப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 நிமிடம் முதல் 35 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புறப்படும் நேரத்தை குறைத்து, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.