சென்னை: அஞ்சலை அம்மாளின் பேத்தி தவெக தலைவர் விஜய்யிடம் தனது பாட்டியின் முக்கியமான 2 கொள்கைகளைக் கடைப்பிடிக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக அஞ்சலை அம்மாளை அறிவித்திருந்தார் விஜய். அதுவரை பரவலாக தமிழகம் இவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அஞ்சலை அம்மாள் காந்தியவாதி. அவர் இந்திய விடுதலைக்காகப் போராடியவர். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவர். மேலும் கதர் துணிகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக ஈ.வெ.ராமசாமியுடன் சேர்ந்து தலையில் கதர் ஆடைகளைச் சுமந்து விற்றவர்.
அஞ்சலை அம்மாளின் அரசியல் வாழ்க்கை 1921இல் தொடங்கியது. நாடு விடுதலை பெறும் வரை அவர் பல போராட்டங்களில் பங்கேற்றார். காலத்தால் மறைக்கப்பட்ட அவரை விஜய் மீண்டும் இளம் தலைமுறைக்குப் பரவலாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி மங்கையர்க்கரசி, தவெக தலைவர் விஜய்யிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், "விஜய் அவரது கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அஞ்சலை அம்மாளை எடுத்துக் கொண்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். ஆனால், அஞ்சலை அம்மாளிடம் இருந்து எந்தக் கொள்கையை அவர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பெரியாரிடம் இருந்து பெண்விடுதலை, பெண் முன்னேற்றம் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருந்தார். அதேபோல் அம்பேத்கரிடம் இருந்து சமூக நீதியை எடுத்துக் கொள்கிறோம் என்றும் காமராஜரிடம் இருந்து ஒரு நேர்மையான அரசியலை எடுத்துக் கொள்கிறோம் என்றும் விளக்கம் அளித்திருந்தார். அஞ்சலை அம்மாளைப் பற்றிப் பேசிய போது அவர் சிறையிலிருந்து கர்ப்பிணியாக வெளியே வந்து அவர் மீண்டும் குழந்தைப் பெற்றுக் கொண்டு சிறைக்குச் சென்றார். அவர் ஒரு லேடி ஸ்டார் என்பதைப் போன்று கூறியிருந்தார். அதில் அஞ்சலை அம்மாளின் எந்தக் கொள்கை அவர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.
என் பாட்டி அஞ்சலை அம்மாள் ஒரு காந்தியவாதி. அவர் நாட்டு விடுதலைக்காகக் காந்தி என்னென்ன போராட்டங்களை எல்லாம் முன்வைத்தாரோ அதில் அனைத்திலும் அவர் கலந்துகொண்டார். அவர் மது ஒழிப்பு என்ற கொள்கையில் தீவிர ஈடுபாடு காட்டினார். கள்ளுக்கடை முன்பாக மறியல் செய்தவர். அதற்காக தடி அடி பெற்று சிறைக்குச் சென்றவர். என் தாத்தாவுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதனால் பாட்டி சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகளை அடைந்தார். காந்தி 1921 கடலூரில் பேசிய பேச்சைக் கேட்டு, அன்று முதல் மது அருந்துவதில்லை என்று சபதம் எடுத்தார் தாத்தா.
அப்படிப் பார்த்தால் மது ஒழிப்பு என்பதுதான் பாட்டியின் முக்கிய கொள்கையாக இருந்துள்ளது. எனவே, நாங்கள் விஜய்யிடம் வைக்கும் கோரிக்கை அதுதான். இன்றைய இளம் தலைமுறையினர் பலர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். விஜய் போன்ற பிரபலமான ஒரு தலைவர் குடிக்கு எதிராக சொல்லும் போது அதை இவர்கள் பின்பற்றுவார்கள். விஜய் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர் வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதைக் கடைப்பிடிப்பார்கள். அதை விஜய் செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை.
அஞ்சலை அம்மாள் அரசியலை ஒரு சேவையாகவே ஏற்றுக் கொண்டார். அவர் அரசியல் மூலம் பணம் சம்பாதிக்கவில்லை. பாட்டி தன் வீட்டை விற்று அரசியலுக்காகச் செலவு செய்துள்ளார். போராட்டங்களைச் செய்துள்ளார். இப்படி சொந்த சொத்துகளை விற்று செலவு செய்து வறுமையில் வாடியதால், ராமச்சந்திர ரெட்டியார் என்பவர் பாட்டியின் வீட்டை மீட்டுக் கொடுத்தார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு தியாகிகளுக்குக் காமராஜர் ஆட்சியில் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. அப்போது பாட்டிக்கும் ஓய்வூதியம் வழங்கினார்கள்.
அப்போது 'நாட்டு விடுதலைக்காகத்தான் போராடினேன். ஓய்வூதியம் பெறுவதற்காக நான் போராடவில்லை' என்று கூறி அதை வாங்க மறுத்துவிட்டார் பாட்டி. விஜய் நிறையப் பணம் சம்பாதித்துவிட்டார். எனவே அவர் அரசியலை ஒரு சேவையாகச் செய்ய முன்வரவேண்டும். பாட்டியிடம் இருந்து அவர் அந்தச் சேவை என்ற கொள்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage