குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே, பைபோர்ஜாய் புயல் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக, கடலோர மாவட்டங்களான கட்ச், போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, ஜாம்நகர், ஜுனாகத், மோர்பி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், துவாரகாவில் பலத்த காற்று வீசியதோடு மட்டுமல்லாமல், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
மும்பையில் உள்ள வொர்லி கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது.
ஜூஹூ மற்றும் நவ்சாரி ஆகிய கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, துவாரகா கடற்கரை அருகே கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட 50 ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், குஜராத் கடற்கரை பகுதிகளில் மிதமான மழை பெய்தது.