சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள விசிக தலைவர் திருமாவளவன் மறுத்தது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ள நிலையில், விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் இன்று மாலை நடக்கவிருக்கும் 'அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் திருமாவளவன், இந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ளவில்லை என அறிவித்து உள்ளார்.
அரசியல் களத்தில் விவாதம்: இந்நிலையில், திமுக தலைமையின் அறிவுறுத்தலால் தான் திருமாவளவன், விஜய்யுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விரிவான அறிக்கையையை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
சங்கத்தமிழன் பேட்டி: சங்கத்தமிழன் பேசுகையில், "திருமாவளவன், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காததற்கு பின்னணியில் பல அரசியல் உத்திகள் இருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் யாருடைய மிரட்டலுக்கும் பயந்ததாக வரலாறு இல்லை. ஒருகாலத்தில் கடலூர் மாவட்டத்திற்குள்ளேயே திருமாவளவன் வரக்கூடாது என தடை போட்டார்கள். அதை உடைத்துச் சென்று வந்தார் திருமாவளவன். மிரட்டல் உருட்டலுக்கு பயப்படும் ஆள் திருமாவளவன் அல்ல.
ஒரு புலி பதுங்குவது பயத்தால் அல்ல, புலி பதுங்குகிறது என்றால் அது பாய்வதற்குத்தான். ஒரு செயல் திட்டத்தில் நாம் பாயப்போவது உறுதி என்றால், பதுங்குவதில் தவறில்லை. திமுக கூட்டணி நெருக்கமாக இருக்கிறது. இந்தச் சூழலில் அரசியல் ரீதியிலான உத்திகளை கையாள வேண்டிய பொறுப்பு திருமாவளவன் கையில் இருக்கிறது.
நாங்கள் அடிமைகள் அல்ல: ஸ்டாலின், திருமாவளவன் இடையே ஒரு அண்ணன் தம்பி உறவு இருக்கிறது. விஜய் உடன் மேடையேறினால் கூட்டணியை விட்டு வெளியே சென்றுவிடுங்கள் என்று என்றைக்குமே சொல்லக்கூடிய நபர் ஸ்டாலின் அல்ல. அதைக் கேட்டு செயல்படும் அளவுக்கு நாங்கள் அடிமைகளும் அல்ல. விசிக அவ்வளவு கேவலமான கட்சி அல்ல. எங்களுக்கென்று சுயபுத்தி இருக்கிறது.
விஜய் பங்கேற்கும் நிகழ்வில் திமுக கூட்டணி தலைவர் கலந்துகொண்டால் கூட்டணிக்குள் பெரிய பிரச்சனை ஏற்படும் என்ற அளவுக்கு விஜய் பெரிய ஆளும் அல்ல. விசிகவை உடைப்பதற்கு யாராவது கனவு கண்டால் அந்தக் கனவு என்றைக்கும் பலிக்காது. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு பின்னணியில் நேர்மை இருக்கிறது, கடைசி மனிதனுக்கான அரசியலும் இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?
கடந்த கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலிலும் அதற்கு முன்னர் பத்தாண்டு காலத் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும் எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் எதிர் கொண்டிருப்போம்? எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்!" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage