மிரட்டல் வழக்கு.. அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!

post-img

சென்னை: நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, நக்கீரன் பத்திரிகையை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, அப்துல் ஜலீல் என்பவர் அளித்த புகாரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி, தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன்கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தினமும் காலை 10.30 மணிக்கு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து ஓம்கார் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Post