டெல்லி: ஹரியானா எல்லையில் போலீசார் நடத்திய கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு தாக்குதலில் விவசாயிகள் பலரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து விவசாயிகள் தங்களது டெல்லி சலோ எனும் டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
2020-21-ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக உலகை உலுக்கிய போராட்டத்தை விவசாயிகள் தலைநகர் டெல்லி எல்லையில் மேற்கொண்டிருந்தனர். ஓராண்டு காலம் நீடித்த இந்தப் போராட்டம் பனி, குளிர், வெயில் ஆகியவற்றின் கடுமையை எதிர்கொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் 700க்கும் அதிகமான விவசாயிகள் மரணித்தனர்.
விவசாயிகளின் தீரமிக்க இந்தப் போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசு பணிந்தது. சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியிருந்தார். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த உறுதி மொழி காற்றில் பறக்கவிடப்பட்டது.
இதனால் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க முயற்சித்தனர். பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்ட போது ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஷம்பு எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட அங்கேயே முகாமிட்டு தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனையடுத்து இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக டெல்லி நோக்கி செல்லும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ஹரியானா அரசு இந்தப் போராட்டத்தை தீவிரமாக ஒடுக்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி நோக்கிப் புறப்பட்ட விவசாயிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தங்களது போராட்டத்தை ஒருநாள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றும் விவசாயிகள் டெல்லி நோக்கி மீண்டும் புறப்பட்டனர். ஆனால் ஷம்பு எல்லையில் விவசாயிகளை மீண்டும் கொடூரமாக தாக்கி ஒடுக்கியது போலீசும் பாதுகாப்புப் படையும். இன்றும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து டெல்லி நோக்கி செல்லும் டெல்லி சலோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage