சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை.. நவ.16ல் நடை திறப்பு.. டிச.27 வரை ஒலிக்கும் சரண கோஷ

post-img

சபரிமலை: கார்த்திகை மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை திருவிழாவிற்காக வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. 17ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.


கேரள மாநிலம் சபரிமலையில் அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை காண்பது பலருக்கும் ஆனந்தம்.


சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.


இந்த ஆண்டு மண்டல பூஜை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாளிகாபுரம் மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மேல்சாந்தியாக பதவியேற்று தங்களின் பணிகளை தொடங்க உள்ளார். புதிய மேல்சாந்தி படியிறங்குவார்.


இதே போல் மாளிகப்புரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் ஹரிஹரன் நம்பூதிரி தேர்வாகியுள்ளார் அவரும் பதவியேற்றுக்கொள்வார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரு மேல் சாந்திகளும் வரும் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை முதல் ஒரு ஆண்டுக்கு பணியாற்றுவார்கள்.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி கோவில் திறக்கப்பட உள்ளது. 17ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.


மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.


ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்கள் https://sabarimalaonline.org எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post