தெலுங்கானா தேர்தல்.. காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசருக்கு முக்கிய பதவி..!

post-img

டெல்லி: தெலுங்கானாவில் தேர்தலை எதிர்கொள்ளக் காங்கிரஸ் ரெடியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த தலைவரும் திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசருக்கு இந்தத் தேர்தலையொட்டி முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. இதில் சத்தீஸ்கரைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானா: இந்த 5 மாநில தேர்தலில் தென்மாநிலமான தெலுங்கானாவில் ஒரே கட்டமாக நவ.30ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 3ஆம் தேதி அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கே மொத்தம் 119 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 60 இடங்கள் தேவை.. இந்த முறை தெலுங்கானாவில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
தெலுங்கானா தனி மாநிலமான உருவாக்கப்பட்டது முதலே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் கேசிஆருக்கு மிகப் பெரிய பங்கு இருக்கும் நிலையில், அவருக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம். ஆனால், இந்த முறை தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதாகவே கூறப்படுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, உள்ளூர் தலைவர்கள் மீதான கோபம் என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ்: மறுபுறம் காங்கிரஸ் தெலுங்கானாவில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டு வரை காங்கிரசுக்கு தெலுங்கானாவில் பெரியளவில் செல்வாக்கு இல்லை. ஆனால், அதன் பிறகு சில மாதங்களில் தலைகீழ் மாற்றம் என்றே சொல்லலாம். அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெடுத்த பிரசாரம் தெலுங்கானாவில் காங்கிரஸை வளர்த்தெடுத்துள்ளது. குறிப்பாகக் கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் கேம் சேஞ்சராகவே அமைந்துவிட்டது.
இதனால் மிகப் பெரிய நம்பிக்கையுடன் காங்கிரஸ் தெலுங்கானா சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கிடையே தெலங்கானா சட்டசபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பார்வையாளராகக் காங்கிரஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த தலைவரும் திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
திருநாவுக்கரசர்: இது தொடர்பாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக எம்பி திருநாவுக்கரசரை நியமிக்கக் காங்கிரஸ் தேசிய தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக செயல்பாட்டிற்கு வரும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Post