சென்னை: ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிறந்த திரைப்படங்களையும் அதில் நடித்தவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களுக்கு 69 ஆவது தேசிய விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.
இதில் ஃபிக்சன், நான் ஃபிக்சன் பிரிவில் தமிழ் படங்கள் மற்றும் படைப்புகளுக்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. ஃபிக்சன் பிரிவில் கடைசி விவசாயி படத்திற்கு இரு விருதுகளும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தெலுங்கு , இந்தி திரைப்படங்களே விருதுகளை குவித்தன. அதிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மட்டும் 6 தேசிய விருதுகளை பெற்றது. அது போல் தெலுங்கு திரையுலகில் முதல்முறையாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் போன்ற படங்களுக்கு ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை.
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஜெய்பீம் படம் தேசிய விருது அறிவிப்பில் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், சுசீந்திரன், நானி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். நானி இதயம் நொறுங்குவது போன்ற எமோஜியை போட்டிருந்தார்.
அந்த வகையில் ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்காதது குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் 'ஜெய்பீம்' திரைப்படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? #Justasking" என பதிவிட்டுள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை கிண்டலடித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அது போல் அதை காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கிண்டல் ஏதும்இல்லை என கூறியதுடன் நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறி அந்த பிரச்சினையை அதோடு ஆஃப் செய்தார். தற்போது கொடைக்கானலில் பொது இடத்தை ஆக்கிரமித்து தனது ரிசார்ட்டுக்கு பாதை அமைத்ததாக புகார்கள் எழுந்துள்ளன. ஊர் நியாயம் பேசும் பிரகாஷ் ராஜ் இப்படி அரசு நிலத்தை அபகரிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.